பிலிப்பைன்சில் பள்ளியில் 2 பேரை சுட்டுக்கொன்று மாணவனும் தற்கொலை
பிலிப்பைன்சில் பள்ளியில் 2 பேரை சுட்டுக்கொன்று மாணவனும் தற்கொலை
ADDED : செப் 18, 2026 07:53 PM
மணிலா: பிலிப்பைன்சில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் உள்ள தெற்கு கோடபாட்டோ மாகாணத்தின் பாங்கா நகரில், தேசிய உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் மதிய உணவுக்கு பின், 16 வயதான மாணவர் ஒருவர், வகுப்பறையில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில் இருவர் உயிரிழந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவரும் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தார். இதில், எட்டு மாணவர்கள் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும், 14 – 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.
துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன், மதிய உணவுக்கு முன், தன் நண்பர்களிடம், ‘நான் மதிய உணவுக்கு பின், என் திட்டத்தை செயல்படுத்த போகிறேன். அதனால் நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்’ என, கூறியதாக சொல்லப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
