UPDATED : ஜூலை 21, 2024 06:05 PM
ADDED : ஜூலை 21, 2024 12:08 AM

டாக்கா:வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, 133 பேர் பலியானதை அடுத்து, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ராணுவம் ரோந்து வருகிறது.
கடந்த 1971ல் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டு வென்று, வங்கதேசம் தனி நாடானது. போரில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
கடந்த 2018ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அரசு அறிவித்ததை அடுத்து, மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். எதிர்க்கட்சிகள் துாண்டி விடுவதாக ஆளும் அவாமி லீக் கட்சி கூறியது. அக்கட்சியின் தொண்டர்கள், போராடும் மாணவர்களை தாக்கினர். பல இடங்களில் மோதல் நடந்து, கலவரமாக மாறி தீ வைப்பு சம்பவங்கள் பரவின. அரசு தொலைக்காட்சி நிலையம் எரிக்கப்பட்டது.
ஜெயில் உடைப்பு
நர்சிங்டி மாவட்டத்தில் சிறையை முற்றுகையிட்ட மாணவர்கள், கதவுகளை உடைத்து 800 கைதிகளை விடுவித்தனர். சிறைக்கு தீ வைக்கப்பட்டது. முக்கிய வங்கிகள், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் இணையதளங்கள் போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டன. மூன்று நாட்களாக நடந்து வரும் வன்முறையில், இதுவரை 133 பேர் பலியானதாக தெரிகிறது; 1,000 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். அதில் பாதி பேர் போலீஸ்காரர்கள்.ஊரடங்கு உத்தரவை அடுத்து, கலவரம் செய்வோரை கண்டதும் சுட அரசு உத்தரவிட்டது.
அதையும் மீறி, டாக்காவின் ராம்புரா பகுதியில் நேற்று போராட்டம் நடந்தது. போலீசார் சுட்டதில் சிலர் காயம் அடைந்தனர். பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் மூடப்பட்டுள்ளன. டெலிபோன், இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சேனல்களின் ஒளிபரப்பும் முடக்கப்பட்டுள்ளது.
கொந்தளிப்பால், வங்கதேசத்தில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விமான, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் சாலை மார்க்கமாக சொந்த நாடு திரும்புகின்றனர். நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியா வழியாக தாயகம் செல்கின்றனர். இந்திய மாணவர்களில் 364 பேர் மேகாலயா எல்லை வழியாக நேற்று முன்தினம் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணம் ரத்து
'வங்கதேசத்தில் சிக்கியுள்ள 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இதுவரை 778 மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மற்ற மாணவர்களும் பாதுகாப்பாக வந்து சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.கலவர சூழல் தொடர்வதால் ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருந்த பயணத்தை பிரதமர் ஷேக் ஹசீனா ரத்து செய்துள்ளார். இட ஒதுக்கீடு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர மாணவர்களுடன் பேச, அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார்.
ரத்து
இதனிடையே, போராட்டத்திற்கு காரணமான இந்த இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.