சுனிதா வில்லியம்ஸ் விவகாரம்: எலான் மஸ்க் பொய் சொல்வதாக விண்வெளி வீரர் குற்றச்சாட்டு
சுனிதா வில்லியம்ஸ் விவகாரம்: எலான் மஸ்க் பொய் சொல்வதாக விண்வெளி வீரர் குற்றச்சாட்டு
ADDED : பிப் 21, 2025 02:15 PM

வாஷிங்டன்: சுனிதா மற்றும் வில்மோரை விண்வெளியில் இருந்து அழைத்து வரும் விவகாரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பொய் சொல்வதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஆன்ரியாஸ் மோகன்சென் குற்றம் சாட்டினார். அவரை பதிலுக்கு முட்டாள் என்று மஸ்க் திட்டியுள்ளார்.
அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், எலான் மஸ்க்கும் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, எலான் மஸ்க் கூறியதாவது: சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியிலேயே கைவிடப்பட்டனர் என நான் நினைக்கிறேன். தற்போது அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களை விரைவாக அழைத்து வருவதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம். அரசியல் காரணங்களுக்காக அவர்கள் விண்வெளி மையத்திலேயே விடப்பட்டனர், இவ்வாறு கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை பகிர்ந்த விண்வெளி வீரர் ஆன்ரியாஸ் மோகன்சென்,48, ' என்ன ஒரு பொய்' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு பதிலளித்த எலான் மஸ்க், ' உங்களுக்கு மூளை மழுங்கி விட்டது. ஸ்பேஸ் எக்ஸ் பல மாதங்களுக்கு முன்பே அவர்களை விண்வெளியில் இருந்து அழைத்து வந்திருப்போம். அப்போதைய அதிபர் பைடனிடம் இது தொடர்பாக நேரடியாக கேட்டேன். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அவரை முந்தைய அரசு நிராகரித்து விட்டது. முட்டாள்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.
எலான் மஸ்க்கின் இந்தப் பதிவுக்கு ஆன்ரியாஸ் மோகன்செனும் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில், 'நீண்ட காலமாக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா மூலம் நீங்கள் செய்த சாதனைகளை பாராட்டுகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுனிதாவும், வில்மோரும் பூமிக்கு திரும்ப இருப்பது உங்களுக்கு தெரியும். ஆனால், இதுவரையில் நீங்கள் அவர்களை அழைத்து வருவதற்கான விண் ஓடத்தை அனுப்பவில்லை. செப்டம்பரில் இருந்தே விண்வெளி நிலையத்தில் இருக்கும் டிராகன் கேப்சூலில் தான் அவர்கள் திரும்ப வர இருக்கிறார்கள்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.