தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ?
தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ?
UPDATED : டிச 03, 2024 09:41 PM
ADDED : டிச 03, 2024 08:51 PM

சியோல்: வட கொரிய கம்யூ. படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று (டிச.,04) அவசரகால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வட கொரியா - தென் கொரியா இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடை யேயான உறவு பாதிக்கப்பட்டு பகை நாடுகளாக உள்ளன. வட கொரியா மீது தென் கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டேன் என வடகொரியா அதிபர் கிம் ஜான் உங் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் தென் கொரியா அதிபர் யூன்சுக் யேல் இன்று (டிச.,04) டி.வி. வாயிலாக நாட்டு மக்களுக்கு திடீரென அவசரகால நிலையை பிரகடனபடுத்தினார்.
இது குறித்து அவர் கூறியதாவது: வட கொரியாவின் கம்யூ. படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கவும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கவும், அவசர கால ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன். இப்பிரகடனத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல. சுதந்திரம் , அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை பாதுகாக்க தக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை . இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அதிபரின் அறிவிப்பில் தேச விரோத சக்திகள் என தங்களை அழைத்ததாக எதிர்க்கட்சிகள் அதிபர் யூன்சுக் யேலுக்கு கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே புதிய ராணுவ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பார்லி., வளாகத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனையடு்த்து போலீசார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது.