திடீர் தொழில்நுட்ப கோளாறு கிரீசில் முடங்கியது விமான சேவை
திடீர் தொழில்நுட்ப கோளாறு கிரீசில் முடங்கியது விமான சேவை
ADDED : ஜன 05, 2026 12:34 AM

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில், ரேடியோ அலைவரிசை அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறால் விமான போக்குவரத்து தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, விமான சேவை முடங்கியது.
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கீரிசில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள விமான போக்குவரத்து தகவல் தொடர்பு மையத்தில், ரேடியோ அலைவரிசை அமைப்பில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதனால், விமான போக்குவரத்து தொடர்பான தகவல்களை பரிமாறுவதில் சிக்கல் ஏற்பட்டது. நாடு முழுதும் இயங்கும் விமான நிலையங்களில், போக்குவரத்து தொடர்பான செயல்பாடுகள் ஸ்தம்பித்தன.
இதனால் நாடு முழுதும் நுாற்றுக்கணக்கான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. விமான நிலைய செயல்பாடுகளும் முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயணியர் விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர். இந்த தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் உறுதியாக கண்டறியப்படவில்லை. ஏதென்சில் உள்ள நாட்டின் மிகப்பெரிய வான் கட்டுப்பாட்டு மையமான, 'ஏதென்ஸ் மற்றும் மாசிடோனியா' பகுதி கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள மத்திய ரேடியோ அலைவரிசை அமைப்புகள் முடங்கியதே இந்த இடையூறுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், கிரீஸ் வான்வழியாக செல்லும் சில சர்வதேச விமானங்கள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டன.

