மேற்கு ஆசியாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்: ஜெய்சங்கர்
மேற்கு ஆசியாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்: ஜெய்சங்கர்
UPDATED : நவ 25, 2024 10:13 PM
ADDED : நவ 25, 2024 10:11 PM

ரோம்: பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தம் ஏற்பட அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ராணுவ நடவடிக்கையில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. சர்வதேச மனிதநேய சட்டங்களை யாரும் மீறக்கூடாது. உடனடியாக, போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.நீண்ட கால திட்டமாக, பாலஸ்தீன மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்னைகள் சரி செய்யப்பட வேண்டும். இரு தரப்பு தீர்வு ஏற்படுத்துவதற்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது.
மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. இஸ்ரேலும், ஈரானும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதையும், தொடர்பு ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய இரு நாடுகளுடனும் உயர் மட்ட அளவில் இந்தியா தொடர்பில் உள்ளது. வணிக போக்குவரத்தை உறுதி செய்வதற்கு ஏடன் வளைகுடா மற்றும் அரபிக் கடலின் வட பகுதியிலும் இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.
ரஷ்யா உக்ரைன் இடையே போர் நீடிப்பது கவலை அளிக்கிறது. போர்க்களத்தில் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது என்பதை இந்தியா நீண்ட காலம் சொல்லி வருகிறது. விரைவாக அவர்கள் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். இதைத்தான் உலக நாடுகள் விரும்புகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.