ADDED : ஜூலை 27, 2025 07:25 AM

தைபே : பார்லிமென்டில் பெரும்பான்மை உள்ளதால், அரசின் மசோதாக்கள், திட்டங்களை முடக்கி வரும் எதிர்க்கட்சியின் எம்.பி.,க்களை திரும்பப் பெறுவதற்கான தேர்தல் தைவானில் நடக்கிறது.
கிழக்காசிய நாடான தைவான், தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என, சீனா கூறி வருகிறது. ஆனால், தனி நாடு உரிமையை தைவான் கேட்டு வருகிறது. இதனால், சீனாவுடன் அடிக்கடி உரசல் ஏற்படுகிறது.
தைவானில் கடந்தாண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தலில், அதிபர் லாய் சிங் டே எனப்படும் வில்லியம் லாயின் டி.பி.பி., எனப்படும்ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு, மொத்தமுள்ள 113 இடங்களில், 51 இடங்கள் கிடைத்தன.
அதே நேரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான, கே.எம்.டி., எனப்படும் கியோமின்டாங் கட்சி, 52 இடங்களில் வென்றது.
தைவான் மக்கள் கட்சி, சுயேச்சைகள் ஆதரவு என, பார்லிமென்டில் இந்தக் கூட்டணிக்கு, 62 எம்.பி.,க்கள் உள்ளனர்.
அதிபர் லாய் கொண்டு வந்த பல முக்கிய மசோதாக்கள், திட்டங்கள், பட்ஜெட்டை நிறைவேற்ற விடாமல், எதிர்க்கட்சிகள் கூட்டணி முடக்கியது.
இதையடுத்து, தைவான் சட்டத்தின்படி, எம்.பி.,க்களை திரும்பப் பெறுவதற்கான உரிமையை பயன்படுத்த, பல அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
இதன்படி, லாய் கட்சியின் ஒரு எம்.பி.,யை திரும்பப் பெறுவதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.
இதைத் தொடர்ந்து, கே.எம்.டி., கட்சியின், 24 எம்.பி.,க்களை திரும்பப் பெறுவதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அக்கட்சியின் மேலும், ஏழு எம்.பி.,க்களை திரும்பப் பெறுவதற்கான தேர்தல் அடுத்த மாதத்தில் நடக்க உள்ளது.
அந்தந்த எம்.பி., தொகுதியில் உள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம், 25 சதவீதம் பேர் ஓட்டளிக்க வேண்டும். பதவியில் இருந்து நீக்குவதற்கான ஓட்டுகள் அதிகம் கிடைக்க வேண்டும்.
நேற்று நடந்த தேர்தலில் போதிய அளவு ஓட்டுகள் பதிவாகாததால், 24 எம்.பி.,க்களின் பதவியும் தப்பியது.