ஆப்கனில் பெண்கள் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை
ஆப்கனில் பெண்கள் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை
ADDED : டிச 31, 2024 02:17 AM
காபூல், ஆப்கானிஸ்தானில் பெண்கள் புழங்கும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் உள்ள தலிபான்கள், பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் போன்றவை அங்கு மறுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஆப்கனில் பெண்கள் அதிகம் புழங்கும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஜன்னல்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தலிபான்கள் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:
பெண்கள் வீட்டின் சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதை பார்ப்பது அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழிவகுக்கும். அதனால், புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, அண்டை வீட்டாரின் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக்கூடாது.
ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்களை சுவர் எழுப்பியோ அல்லது அதை பார்க்க முடியாத வகையிலோ தடை செய்ய வேண்டும். இதை, வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் வாயிலாக அண்டை வீட்டாருக்கு ஏற்படும் தொல்லைகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.