தலிபான்களை அனுசரிக்க வேண்டும்: ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
தலிபான்களை அனுசரிக்க வேண்டும்: ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
ADDED : டிச 12, 2025 05:08 AM

நியூயார்க்: ஆப்கானிஸ்தான் மீட்பு நடவடிக்கைகளுக்காக, தலிபான் அமைப்புடன் அனுசரித்து நடக்கும் அணுகுமுறைகளை உலக நாடுகள் கையாள வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கான உதவிகள் குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் பர்வதநேனி ஹரீஷ் பேசியதாவது:
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிலையான நன்மைகளை கொண்டு வர உதவும் நுட்பமான கொள்கை வழிமுறைகளை ஐ.நா.,வும், சர்வதேச சமூகமும் பின்பற்ற வேண்டும். தலிபான்களுடன் ஒரு யதார்த்தமான மற்றும் நடைமுறை சார்ந்த அணுகுமுறைகளை கையாள வேண்டும் என இந்தியா அழைப்பு விடுக்கிறது. சீரான ஒரு கொள்கை ஈடுபாட்டுடன் கூடிய நேர்மறையான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானின் விரிவான வளர்ச்சி, மனிதாபிமான உதவி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கான எங்களின் பங்களிப்பை அதிகரிக்க, அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் தொடருவோம்.
மேலும், சமீபத்தில் பாகிஸ்தான், ஆப்கனில் நடத்திய வான்வழி தாக்குதல்களில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறிய கடுமையான செயல் மட்டுமின்றி, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகும்.
பல ஆண்டுகளாக எண்ணற்ற பலவீனமான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டின் மக்களுக்கு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அணுகலை தந்திரமாக மூடுவது என்பது அந்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் வர்த்தகம் மற்றும் போக்கு வரத்து பயங்கரவாதமாகும்.
இச்செயல்கள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாகும். இத்தகைய பகிரங்கமான அச்சுறுத்தல்களும், போர் செயல்களும் ஐ.நா., சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும்.
இத்தகைய செயல்களை இந்தியா வன்மையாக கண்டிக்கும் அதேவேளையில், ஆப்கனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தையும் நாங்கள் உறுதியாக ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

