இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம்: சவுதி அரேபியா கவலை
இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம்: சவுதி அரேபியா கவலை
ADDED : ஏப் 30, 2025 10:24 PM

ரியாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் ஏற்பட்ட பதற்றத்திற்கு சவுதி அரேபியா கவலை தெரிவித்து உள்ளது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவுகிறது. மேலும், எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் இதற்கு கவலை தெரிவித்து சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றம் மற்றும் எல்லையில் இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் துப்பாக்கிச்சூடு ஆகியன கவலையை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்காதவாறு அதனை தணிக்க வேண்டும். பிரச்னைகளை தூதரக ரீதியில் தீர்ப்பதன் மூலம், சிறந்த அண்டை நாடுகளுக்கான கொள்கையை உறுதி செய்ய முடியும். இரு நாட்டு மக்கள், மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு நலன் பயக்கும் வகையில், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பணியாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.