திகிலூட்டும் 'மெலிஸா' புயல்; பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை
திகிலூட்டும் 'மெலிஸா' புயல்; பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை
ADDED : அக் 28, 2025 07:44 PM

வாஷிங்டன்: கரீபிய கடலில் உருவாகியுள்ள 'மெலிஸா' புயல் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த சில நாட்களாக 'மெலிஸா' என பெயரிடப்பட்ட புயல் தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.இந்த புயல் இன்று இரவு(அக்., 28) ஜமைக்கா தீவில் கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 280 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டு உள்ளது.
மெலிஸா சூறாவளி ஜமைக்காவில் 15 லட்சம் மக்களை அச்சுறுத்துகிறது. இந்த புயல் காரணமாக, ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா முழுவதும் மொத்தம் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.இந்த புயலால் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. ஜமைக்காவில் தற்போது 50 ஆயிரம் மக்கள் மின்சாரம் இன்றி உள்ளனர்.
மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன, பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளில் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமான சேவைகள், துறைமுகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது என ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்நஸ் தெரிவித்துள்ளார்.

