துருக்கி விமான நிறுவனத்தில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: மூவர் பலி
துருக்கி விமான நிறுவனத்தில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: மூவர் பலி
ADDED : அக் 24, 2024 12:58 AM
அங்காரா, துருக்கியில் உள்ள மிகப்பெரிய விமான நிறுவனத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். பயங்கரவாதிகளில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேற்காசிய நாடான துருக்கியில், தலைநகர் அங்காரா அருகே 'துருக்கி ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' என்ற மிகப்பெரிய விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சர்வதேச அளவில் பயணியர் விமானம் மற்றும் போர் விமானங்களுக்கான வடிவமைப்பு, தயாரிப்பு, உதிரி பாகங்களுக்கான சேவைகளை வழங்குகிறது.
கல்லுாரியுடன் அமைந்துள்ள இந்த வளாகத்திற்குள் 15,000 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் இங்கு நுழைந்து கண்ணில் தென்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து துருக்கி பாதுகாப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் நுழைந்து பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவரது முகம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
ஊழியர்களை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. அதுகுறித்த தகவல்கள் இரவு வரை அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் நேற்று வரை பொறுப்பேற்கவில்லை.