அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வர ஏற்பாடு!
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வர ஏற்பாடு!
ADDED : ஜூலை 07, 2025 01:40 PM

புதுடில்லி: அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த 2024ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் சண்டிகரின் நடந்த குண்டுவீச்சு சம்பவத்தில் ஹேப்பி பாசியா எனப்படும் ஹர்ப்ரீத் சிங்கிற்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதியான இவனுக்கு எதிராக, கடந்த ஜன., மாதம் ஜாமினில் வெளியே வர முடியாதபடி, பிடிவாரண்ட்டை என்.ஐ.ஏ., பிறப்பித்திருந்தது.
ஏற்கனவே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் உள்பட பஞ்சாப்பில் 14 குண்டுவீச்சு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ஹேப்பி பாசியாவுக்கு, 2 பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., அமைப்பினருடன் நேரடி தொடர்பிலும் இருந்து வந்துள்ளான்.
மொத்தம் 18 குற்ற வழக்குகளில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த ஹேப்பி பாசியாவை, கடந்த ஏப்ரல் 17ம் தேதி அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேப்பி பாசியாவை, விரைந்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா அழைத்து வரப்பட்ட பிறகு, பல்வேறு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.