120 பயணிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பயங்கரவாதிகள்: பாக்., ராணுவ வீரர்கள் 6 பேர் பலி
120 பயணிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பயங்கரவாதிகள்: பாக்., ராணுவ வீரர்கள் 6 பேர் பலி
ADDED : மார் 11, 2025 05:21 PM

பலுசிஸ்தான்: பயணிகள் 120 பேருடன் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தானில் உள்ள போலான் எனும் பகுதியில், பயணிகள் 400 பேருடன் சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று பலூச் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பினர் தாக்கினர்.
தண்டவாளங்களை வெடிகுண்டுகள் வைத்து தகர்த்து, நாசவேலைகள் செய்து தடுத்து நிறுத்திய பயங்கரவாதிகள், தடுக்க வந்த 6 ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தின் போது பயணிகளில் பலர் தப்பி ஓடினர். எனினும், ரயிலில் இருந்த பலர் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டனர்.
இச்சம்பவத்திற்கு தனி பலுசிஸ்தான் நாடு கோரி பயங்கரவாத செயல்களை செய்து வரும் பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசால் பயங்கரவாத அமைப்பு என்று வகைப்படுத்தப்பட்ட இந்த பலூச் விடுதலை ராணுவம், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ரயில் கடத்தல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பலூச் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பலுசிஸ்தான் மாகாணத்தில் போலன் மாவட்டத்தின் மஷ்காப், தாதர் பகுதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட இச்சம்பவம் துல்லியமாக திட்டமிடப்பட்ட செயல். எங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், ரயில் பாதையை வெடி வைத்து தகர்த்து, ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தச் செய்தனர். போராளிகள் விரைவாக ரயிலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அனைத்து பயணிகளையும் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். பாகிஸ்தான் ராணுவம் அதிரடியில் ஈடுபட்டால், அதற்கு தக்க முறையில் பதிலடி தருவோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் பிடியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.