ADDED : ஆக 30, 2025 05:52 AM

பேங்காக் : சொந்த நாட்டு ராணுவ தளபதி குறித்து கம்போடியாவின் முன்னாள் பிரதமரிடம் புகார் தெரிவிக்கும் வகையில் பேசியதற்காக, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை நிரந்தரமாக பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, நீண்ட காலமாக எல்லை பிரச்னை உள்ளது. இது, கடந்த மே மாதம் மோதலாக மாறியது.
அப்போது இது தொடர்பாக கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, 39, தொலைபேசியில் பேசினார்.
அதில், தாய்லாந்து ராணுவ தளபதியை தன் எதிரி என ஷினவத்ரா குறிப்பிட்டார். இந்த தொலைபேசி உரையாடல் இணையத்தில் கசிந்தது. இதனால், அவருக்கு தாய்லாந்தில் எதிர்ப்பு கிளம்பியது.
பேடோங்டார்ன் அரசியலமைப்பு மரபை மீறியதாக அவருக்கு எதிராக அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்வதாக, நீதிமன்றம் ஜூலை 1ல் உத்தரவிட்டது. இதையடுத்து, பொறுப்பு பிரதமராக பும்தம் வெச்சாயாசாய் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஒரு நாட்டின் தலைவரான பேடோங்டார்ன், அரசியலமைப்பு மரபு குறித்த விதிகளை மீறிவிட்டார் என கூறி, அவரை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தது.
பிரதமர் பேடோங்டார்ன், தாய்லாந்தின் பிரதமர் பதவிக்கு வந்து ஓராண்டு மட்டுமே ஆகும் நிலையில், தொலைபேசி உரையாடல் கசிவால் பதவியை பறிகொடுத்துள்ளார்.