இலங்கை கிரிக்கெட் அணியின் மீதான தாக்குதல் :பயங்கரவாதிகள் மூன்று பேர் ஜாமினில் விடுதலை
இலங்கை கிரிக்கெட் அணியின் மீதான தாக்குதல் :பயங்கரவாதிகள் மூன்று பேர் ஜாமினில் விடுதலை
ADDED : ஜூலை 17, 2011 01:17 AM
இஸ்லாமாபாத் : கடந்த 2009ல் பாகிஸ்தானில் நடந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதலில், குற்றம் சாட்டப்பட்ட மூவரை பாகிஸ்தான் கோர்ட் ஜாமினில் விடுவித்துள்ளது.
அதே நேரம், தாக்குதலை நடத்திய லஷ்கர் -இ- ஜாங்வி பயங்கரவாத அமைப்பின் தலைவர், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண அரசிடம் இருந்து மாதந்தோறும், நிதியுதவி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2009 மார்ச் 3ல், பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள லிபர்டி சவுக் என்ற பகுதியில், இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் சென்ற பஸ் மீது, பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், கிரிக்கெட் வீரர்கள் பலர் காயம் அடைந்தனர். லஷ்கர் -இ- ஜாங்வி என்ற பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. அதன் தலைவர் மாலிக் ஈசாக், ஹிஜ்ரத்துல்லா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் உள்ள, பயங்கரவாத தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இதுகுறித்த விசாரணை நடந்து வந்தது. மாலிக் ஈசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், லாகூரின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று மேலும் மூவர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் தலா, ஒரு லட்ச ரூபாய் பிணையத் தொகையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சிறையில் மாலிக் ஈசாக் இருந்தபோது, மாகாண அரசிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக பாகிஸ்தானிலிருந்து வெளிவரும், 'தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' பத்திரிகை கூறியுள்ளது.
சிபா -இ- சஹாபா பயங்கரவாத அமைப்போடு தொடர்பில் இருந்ததாக விமர்சிக்கப்பட்ட பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ராணா சனாவுல்லா, கோர்ட் உத்தரவுப்படி மாதந்தோறும் ஈசாக்கின் குடும்பத்திற்கு அரசால் நிதியுதவி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், 'கோர்ட் அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. பஞ்சாபில், நவாஸ் ஷெரீபின் பாக்., முஸ்லிம் லீக் ஆட்சிக்கு வந்த பின் தான் இந்த நிதியுதவி வழங்கப் பெற்றது. பர்வேஸ் முஷாரப் அதிபராக இருந்த வரை இதுபோல் நடக்கவில்லை' என, 'டிரிபியூன் பத்திரிகை' கூறியுள்ளது. பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள், தாக்குதல்கள் என, மொத்தம் 44 வழக்குகளில் ஈசாக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர், கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.