ADDED : பிப் 17, 2025 07:41 AM

கோமா: காங்கோவில் எம்.-23 என அழைக்கப்படும் கிளர்ச்சியாளர்கள், புகாவு நகரை கைப்பற்றி தாக்குதல் நடத்தியதால், அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் தப்பி ஓடினர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், அந்நாட்டு ராணுவத்துக்கும், எம்.-23 என அழைக்கப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.
இவர்கள் காங்கோ ராணுவத்தில் இருந்து வெளியேறியவர்கள். இந்த எம்.-23 கிளர்ச்சியாளர்களை, அண்டை நாடான ருவாண்டா அரசு ஆதரிக்கிறது. அதன் வாயிலாக அவர்கள், கனிம வளம் மிகுந்த காங்கோவின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர்.
இவர்களால் காங்கோவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் இதுவரை 3,000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 3.5 லட்சம் மக்கள் வீடு, தொழில், வேலைவாய்ப்பை இழந்து, சொந்த நாட்டிலேயே அகதிகளாகி உள்ளதாக ஐ.நா., கூறியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் எம்.23 படையினர், காங்கோவின் கிழக்கில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான புகாவுவை கைப்பற்றினர்;
அதன் புறநகர் பகுதியில் உள்ள விமான நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.எம்.23 படையினரை தடுக்கும் முயற்சியில் ராணுவத்தினர் தோற்றனர்.
இதனால், நகரில் இருந்த ஆயுதக் கிடங்கை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக, அதை வெடி வைத்து அழித்துவிட்டு தப்பினர்.
ஆயிரக்கணக்கான பொது மக்களும் சண்டைக்கு பயந்து, நகரை காலி செய்து ஓடினர்.