கனடாவுக்கான இந்திய துாதரை வாபஸ் பெற முடிவு அதிரடி !
கனடாவுக்கான இந்திய துாதரை வாபஸ் பெற முடிவு அதிரடி !
ADDED : அக் 15, 2024 01:48 AM

புதுடில்லி, . 15- பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவுக்கான இந்திய துாதரை தொடர்புபடுத்தி அந்நாட்டு அரசு கடிதம் அனுப்பியது. இதற்கு பதிலடி கொடுத்து விரிவான அறிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான கனடா துாதரக அதிகாரியை நேரில் அழைத்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. உச்சகட்ட அதிரடியாக, கனடாவுக்கான இந்திய துாதரை திரும்பப் பெறுவதாக அறிவித்த மத்திய அரசு, நம் நாட்டில் உள்ள கனடா துாதரக அதிகாரிகள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.
�
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு செப்டம்பரில் குற்றஞ்சாட்டினார். இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசுக்கு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.
அங்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அவர் சந்தித்தார். இருவரும் நலம் விசாரித்ததுடன் சில நிமிடங்கள் பேசினர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ, 'கனடா நாட்டவர்களின் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசின் அடிப்படை கடமை. அதில் தான் நானும் கவனம் செலுத்தி வருகிறேன்' என, குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, கனடா நாட்டினரின் பாதுகாப்பு குறித்து மோடியிடம் ட்ரூடோ வலியுறுத்தியதாக பரவலாக பேச்சு எழுந்தது. இதை, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்திருந்தது.
இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ அரசின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும், நம் வெளியுறவுத் துறை நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டது.
அதில், இந்தியாவுக்கு எதிரான மனநிலையுடன் ட்ரூடோ செயல்படுவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது அடங்குவதற்குள், டில்லியில் உள்ள கனடா துாதரகத்தின் துணை துாதரக அதிகாரியும், துாதரக பொறுப்பு அதிகாரியுமான ஸ்டீவர்ட் வீலரை, நம் வெளியுறவு அமைச்சகத்துக்கு நேற்று நேரில் அழைத்து, மத்திய அரசு தரப்பில் கண்டனம் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நம் வெளியுறவுத் துறை கூறியுள்ளதாவது:
கனடாவில் ஏற்கனவே பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் வன்முறைகள் நடந்து வருகின்றன. தற்போதுள்ள ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசில், அங்குள்ள நம் துாதரக அதிகாரிகளுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நம் துாதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கனடா அரசு கூறியுள்ளது. ஆனால், அங்குள்ள சூழ்நிலை அதை உறுதி செய்வதாக இல்லை. நம் துாதர் மீதே பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நம் துாதரக அதிகாரிகள் அங்கு இருப்பது அவர்களுடைய பாதுகாப்புக்கு ஆபத்தாக அமைந்துவிடும். தற்போதுள்ள ட்ரூடோ அரசின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை.
அதனால், கனடாவில் உள்ள நம் துாதரை திரும்பப் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள துாதரக அதிகாரிகளும் திரும்பப் பெறப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நம் நாட்டில் உள்ள கனடாவைச் சேர்ந்த துாதரக அதிகாரிகள் ஸ்டீவர்ட் வீலர் உட்பட ஆறு பேரை, வரும் 19க்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கனடா பார்லிமென்டுக்கு அடுத்தாண்டு அக்டோபரில் தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு வெகுவாக சரிந்து வருகிறது.
அடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு சாத்தியமில்லை என்று அந்த நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
கனடாவில், இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மிகப் பெரும் பேரடியாக இருக்கும் என, கருதப்படுகிறது.
கனடாவின் மொத்த மக்கள் தொகை, நான்கு கோடி. இதில் இந்தியர்கள் மட்டும் 18 லட்சம் பேர் உள்ளனர்.