அமெரிக்க அதிபர் தேர்தலில் கடைசி 48 மணி நேரம் திக்...திக்...: எச்சரிக்கிறார் மைக்ரோசாப்ட் தலைவர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் கடைசி 48 மணி நேரம் திக்...திக்...: எச்சரிக்கிறார் மைக்ரோசாப்ட் தலைவர்
UPDATED : செப் 19, 2024 09:03 PM
ADDED : செப் 19, 2024 08:59 PM

வாஷிங்டன்: '' அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் கடைசி 48 மணி நேரத்தில் வெளிநாட்டு தலையீடுகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது'' என மைக்ரோசாப்ட் நிறுவனர் பிராட் ஸ்மித் எச்சரித்து உள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க சென்ட்டின் உளவுத்துறை கமிட்டி முன்பு அவர் கூறியதாவது:
மிகவும் முக்கியமான நேரம் இனிமேல் தான் வரப்போகிறது. அது தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரமாக இருக்கலாம். சுலோவேகியா தேர்தலில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கு தேர்தலுக்கு முதல் நாள், முக்கிய வேட்பாளர் பேசியதாக போலி ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து முரண்பாட்டை விதைக்கும் வகையில், வெளிநாட்டு நடிகர்கள் ஏற்கனவே போலியான வீடியோக்களையும், பதிவுகளையும் பரப்பி வருகின்றனர். துணை அதிபரும், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் , பேசாத ஒன்றை பேரணியில் பேசியதாக செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை ரஷ்யா ஹேக்கர்கள் பரப்பி வருகின்றனர்.
டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் பிரசாரம் குறித்து தவறான செய்திகள் மற்றும் தகவல்களை ரஷ்யா, சீனா மற்றும் ஈரானை சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.