ஐ.நா.,வில் சீர்திருத்தத்துக்கு 'குவாட்' தலைவர்கள் உறுதி!: உக்ரைன், காசாவில் அமைதி திரும்பவும் வலியுறுத்தல்
ஐ.நா.,வில் சீர்திருத்தத்துக்கு 'குவாட்' தலைவர்கள் உறுதி!: உக்ரைன், காசாவில் அமைதி திரும்பவும் வலியுறுத்தல்
ADDED : செப் 23, 2024 01:12 AM

டெலாவர்: 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உட்பட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தத்தை கொண்டு வருவதில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்' என, 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் உறுதி தெரிவித்தனர். உக்ரைன் மற்றும் காசாவில் நடைபெறும் போர் நிறுத்தப்பட்டு அமைதி திரும்பவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை அடங்கியது குவாட் அமைப்பு. இதன் ஆண்டு கூட்டம் இந்தாண்டு இந்தியாவில் நடக்கவிருந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கோரிக்கையை ஏற்று, அந்தக் கூட்டத்தை அமெரிக்காவில் நடத்துவதற்கு இந்தியா ஒப்புதல் அளித்தது.
அதிபர் பதவியில் இருந்து இந்தாண்டுடன் விடைபெறும் ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவரில் இந்தாண்டு கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பங்கேற்றனர்.
கூட்டறிக்கை
கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வது, உக்ரைன் போர், காசா போர் உட்பட பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.
'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உலக நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல நாடுகள் இந்த அமைப்பில் இடம்பெற வேண்டும்.
'குறிப்பாக, ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகள் இடம்பெற வேண்டும்.
'அனைத்து தரப்புக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், வெளிப்படையான, திறன் கூடியதாக, ஜனநாயகம் உள்ளதாக, பொறுப்பு உள்ளதாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இதற்காக, கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்' என, கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதைத் தவிர, 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராக உள்ளன.
கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக சேர்க்க, இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு சர்வதேச அமைப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இதை வலியுறுத்தி வருகின்றனர்.
உக்ரைன் போர்
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ல் ரஷ்யா துவங்கிய போர் தற்போதும் தொடர்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில், போரை நிறுத்தி, பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், 'சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டும், மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
'உக்ரைனில் நடந்து வரும் போரால் மனித உயிர்கள் பலியாவதை ஏற்க முடியாது. இந்த போரால் உலகளவில் உணவு, எரிசக்தி, பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் போரை நிறுத்தி, பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்' என, கூறப்பட்டுள்ளது.
அதுபோல, 'அணு ஆயுதங்களை பயன்படுத்துவதையும், பயன்படுத்துவதாக மிரட்டல் விடுப்பதையும் கண்டிக்கிறோம்' என, அதில் கூறப்பட்டு உள்ளது.
காசா பிரச்னை
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்தாண்டு அக்., 7ல் போர் துவங்கியது. இது குறித்தும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'இஸ்ரேல் மீது, கடந்தாண்டு அக்., 7ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டிக்கிறோம். அதே நேரத்தில் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிக்கு தேவையான மனிதநேய உதவிகள் கிடைப்பதை வலியுறுத்துகிறோம்.
'உடனடியாக போரை கைவிடுவதுடன், பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்' என, கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் என, இரு நாடுகள் முறைக்கு குவாட் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என, கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பிரதமர் மோடி அந்த நாடுகளுக்கு சமீபத்தில் சென்று, அங்குள்ள தலைவர்களுடன் பேச்சு நடத்தினார்.
இதற்கு, ஜோ பைடன் உள்ளிட்ட குவாட் அமைப்புகளின் தலைவர்கள், பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தனர்.