ஐ.நா., மனித உரிமை கவுன்சில் நடத்திய ஆய்வு கூட்டத்தை புறக்கணித்தது அமெரிக்கா
ஐ.நா., மனித உரிமை கவுன்சில் நடத்திய ஆய்வு கூட்டத்தை புறக்கணித்தது அமெரிக்கா
ADDED : நவ 10, 2025 12:42 AM
ஜெனீவா: ஐ.நா.,வின் மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கும் அறிக்கை மீது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தப்படும். நடப்பாண்டுக்கான கூட்டத்தை அமெரிக்கா புறக்கணித்தது.
சவால் இதையடுத்து, மனித உரிமைகள் ஆய்வுக்கு வர மறுத்த இரண்டாவது நாடாக இஸ்ரேலுடன், அமெரிக்கா இணைந்து உள்ளது.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் எடுத்த நடவடிக்கை, முந்தைய பரிந்துரைகளின் மீதான செயல்பாடு, சந்தித்து வரும் சவால்கள் ஆகியவற்றை விரிவாக அறிக்கையாக தயாரித்து ஐ.நா., உறுப்பு நாடுகள், கவுன்சிலில் சமர்ப்பிக்கும்.
உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கும் அறிக்கையுடன், அந்நாடு குறித்த ஐ.நா., அமைப்புகளின் தகவல்கள் ஒன்றிணைக்கப் படும்.
மனித உரிமை குழுக்கள், சிறப்பு செயல்பாட்டாளர்கள் மற்றும் பிற ஐ.நா., அமைப்புகளின் அறிக்கைகள் மற்றும் கண்டு பிடிப்புகள் இதில் தொகுக்கப்பட்டு, மனித உரிமைகள் கவுன்சிலில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில்தான், ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மனித உரிமைகள் கவுன்சிலில், கட்டாய நடைமுறையான யு.பி.ஆர்., எனும் உலகளாவிய காலமுறை ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், ஒரு உறுப்பு நாடு சமர்ப்பிக்கும் அறிக்கைகள் மற்றும் ஐ.நா., அமைப்புகளின் அறிக்கைகள் உள்ளிட்டவற்றை, பிற உறுப்பு நாடுகளால் மதிப்பீடு செய்யப்படும்.
இந்த அறிக்கைகள் மீது கேள்விகள் எழுப்பப்படும். தேவைப்படும்பட்சத்தில் சில பரிந்துரைகளையும் மற்ற உறுப்பு நாடுகள் வழங்கும்.
விவாதம் இத்தகைய ஆய்வு கூட்டத்துக்கு, தன் பிரதிநிதிகளை அனுப்ப அமெரிக்கா மறுத்துவிட்டது. இதையடுத்து, ஆய்வு கூட்டம் அமெரிக்க பிரதிநிதிகள் இன்றி நடந்தது.
இந்த ஆய்வில் குடியேற்ற உரிமை உள்ளிட்டவை குறித்து விவாதம் நடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்காததற்கு உறுப்பு நாடுகள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்துள்ளன.

