கவலை அளிக்கும் உக்ரைன் போர்; 'குவாட்' தலைவர்கள் வேதனை
கவலை அளிக்கும் உக்ரைன் போர்; 'குவாட்' தலைவர்கள் வேதனை
ADDED : செப் 22, 2024 07:32 AM

வாஷிங்டன்: 'உக்ரைனில் நடக்கும் போர் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்' என மோடி உள்ளிட்ட குவாட் நாடுகளின் தலைவர்கள் கூட்டு அறிக்கை வெளியிட்டனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது. இதையடுத்து, குவாட் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாக மாற்றும் அவசரத் தேவையை உணர்ந்து சீர்திருத்தம் செய்வோம். சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சில், ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
உக்ரைனில் நடக்கும் பயங்கரமான போர் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம். போர் துவங்கியதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் உக்ரைனுக்குச் சென்று, இதை நேரில் பார்த்திருக்கிறோம்.
இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை உட்பட, ஐ.நா., சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, அமைதியின் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பேச்சு!
குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: குவாட் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது மனித குலத்திற்கு முக்கியமானது. அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான தீர்வை ஆதரிக்கிறோம். உலகம் பதட்டங்கள் மற்றும் மோதல்களால் சூழப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. குவாட்டின் 20வது ஆண்டு விழாவைக் கொண்டாட, அதிபர் பைடன் சொந்த ஊரான வில்மிங்டனை விட சிறந்த இடம் இருக்க முடியாது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியா தயாரித்துள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற சவால்களை நாங்கள் கூட்டாகச் சமாளிக்க முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புற்றுநோயை குணப்படுத்த சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அவசியம். இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடத்தி வருகிறது, மேலும் அனைவருக்கும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.