'இந்திய - சீன எல்லை விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'
'இந்திய - சீன எல்லை விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'
ADDED : நவ 04, 2024 03:20 AM

பிரிஸ்பேன்: எல்லையில், படைகளை விலக்கிக் கொள்வதில் இந்தியா - சீனா இடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுஉள்ளதாக, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசு முறைப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு நேற்று சென்றார். அங்கு, பிரிஸ்பேனில் இந்திய வம்சாவளியினர் இடையே அவர் பேசியதாவது:
உலகத்துடன் இணைந்து வளர்வதை நாங்கள் விரும்புகிறோம். இந்த உலகில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் உலகளாவிய ஒத்துழைப்புக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
இன்று வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மீது, நன்றாகப் படித்தவர்கள், பொறுப்பானவர்கள், வேலை நெறிமுறை, குடும்பத்தை மையமாகக் கொண்டவர்கள் என்ற பிம்பம் உள்ளது.
இவை அனைத்தும் இணைந்திருப்பதால், உலகளாவிய பணிச்சூழலில் நம் மீதான மதிப்பு மேலும் கூடுகிறது என நினைக்கிறேன்.
இந்திய - சீன எல்லை விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இருநாட்டு உறவில் மிகத் தீவிரமான விரிசல் ஏற்பட்டதையும் அதற்கான காரணத்தையும் நீங்கள் அறிவீர்கள்.
கடந்த, 2020க்கு முன் இல்லாத அளவில், எல்லையில் படைகளை சீனா குவித்தது. நாங்களும் பதிலுக்கு படைகளை குவித்தோம். இந்த காலகட்டத்தில் உறவின் பிற அம்சங்களும் பாதிக்கப்பட்டன.
பலசுற்று பேச்சுக்குப் பின், இருதரப்பும் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரவேற்புக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்திய துாதரகத்தின் நான்காவது கிளையை ஜெய்சங்கர் துவக்கி வைக்க உள்ளார்.
அந்நாட்டில் நடக்கவுள்ள 15வது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.
ஆஸ்திரேலிய பார்லி.,யில் நடக்கும் சிறப்புக் கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் செல்கிறார்.