பெண்களுக்கான விளையாட்டுகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை:அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவு
பெண்களுக்கான விளையாட்டுகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை:அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவு
ADDED : பிப் 07, 2025 12:48 AM

வாஷிங்டன்: சிறுமியர் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுகளில், மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்பதற்கு தடை விதிக்கும் உத்தரவை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தினமும் புது புது அறிவிப்புகளை, உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சிறுமியர் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில், மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
நுாற்றுக்கணக்கான விளையாட்டு வீராங்கனையர் முன்னிலையில், இதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். “விளையாட்டில் பெண்களுக்கு எதிரான போரை நிறுத்தியுள்ளேன்,” என, அப்போது அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் தேசிய கல்லுாரி விளையாட்டு சங்கத்தின் புள்ளி விபரங்களின்படி, 1,100 விளையாட்டு பள்ளிகளில் 5.30 லட்சம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.
இதில், 10 பேர் மட்டுமே மூன்றாம் பாலினத்தவர். அதிபரின் புதிய உத்தரவுக்கு இந்த சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போதே, இந்த வாக்குறுதியை டிரம்ப் அளித்திருந்தார். மூன்றாம் பாலினத்தவர், பெண்கள் பிரிவில் பங்கேற்பதற்கு, 25 மாகாணங்களில் ஏற்கனவே தடை சட்டம் அமலில் உள்ளது.