அமெரிக்க நிறுவனங்களுக்கு வரி எதிர் வரி விதிப்பதாக மிரட்டல்
அமெரிக்க நிறுவனங்களுக்கு வரி எதிர் வரி விதிப்பதாக மிரட்டல்
ADDED : ஆக 27, 2025 02:45 AM
வாஷிங்டன்:அமெரிக்காவைச் சேர்ந்த, 'டெக்' நிறுவனங்கள் எனப்படும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை டிஜிட்டல் வரி விதிப்பதை எதிர்த்துள்ள அதிபர் டொனால்டு டிரம்ப், அதை நீக்கவில்லை என்றால் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வேறொரு நாட்டில் உள்ள பயனர்களுக்கு அளிக்கும் சேவைகள் வாயிலாக வருவாய் ஈட்டின. ஆனால், அதற்காக அந்த நாடுகளுக்கு வரி செலுத்தாமல் இருந்தது. இதற்கு காரணம், அமெரிக்காவில் இருந்தே இயங்கி வருவதாக காரணம் கூறின.
'கூகுள், பேஸ்புக்' போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் விளம்பரம், தரவு விற்பனை, இடைத்தரக சேவைகள் மூலம் வருவாய் ஈட்டுகின்றன. இந்த வருவாய்க்கு, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை, டிஜிட்டல் சேவை வரி என்ற பெயரில், 2 முதல் 15 சதவீதம் வரை வரி விதிக்கின்றன.
இதற்கு, அதிபர் டொனால்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அமெரிக்க டெக் நிறுவனங்களை டிஜிட்டல் வரிகள் போட்டு பல நாடுகள் தாக்குகின்றன. நான் நம் டெக் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிற்பேன்.
டிஜிட்டல் வரிகள், டிஜிட்டல் சேவைகள் சட்டம் மற்றும் டிஜிட்டல் சந்தை ஒழுங்குமுறைகள் அனைத்தும் அமெரிக்க தொழில்நுட்பத்தை பாரபட்சமாக நடத்துபவை.
நமக்கு வரி விதிக்கும் இந்நாடுகள், சீனாவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கின்றன. இது மிகவும் ஆத்திரமூட்டுகிறது. இதற்கு இப்போதே முடிவு கட்ட வேண்டும்.
இந்த சட்டங்களை பயன்படுத்தும் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த பாகுபாட்டை நீக்காவிட்டால், அந்நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிப்பேன்.
அமெரிக்காவும், அமெரிக்க டெக் நிறுவனங்களும் உலுக்கி பணமெடுப்பதற்கு உலகின் உண்டியல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் நீக்கம்
அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்களான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, அமேசான் ஆகியவற்றின் வருவாய்க்கு மத்திய அரசு 6 சதவீத டிஜிட்டல் வரி விதித்து வந்தது. அமெரிக்காவுடன் சுமுக வர்த்தகத்துக்காக இந்த வரிகள், ஏப்ரல் 1 முதல் நீக்கப்பட்டுள்ளன.