'ஈரான் அணு உலையை தாக்குங்கள்' இஸ்ரேலுக்கு டிரம்ப் 'அட்வைஸ்'
'ஈரான் அணு உலையை தாக்குங்கள்' இஸ்ரேலுக்கு டிரம்ப் 'அட்வைஸ்'
ADDED : அக் 05, 2024 11:55 PM
வாஷிங்டன்: ''ஈரானின் அணு உலைகளை முதலில் தாக்குங்கள்,'' என, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது.
மோதல்
இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் சரமாரியாக ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் தேர்தலுக்கான வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குடியரசு கட்சி வேட்பாளரான அவர், அமெரிக்காவின் கரோலினாவில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது இஸ்ரேல் - ஈரான் மோதல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிரம்ப் கூறியதாவது:
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது குறித்து அதிபர் ஜோ பைடனிடம் சமீபத்தில் 'ஈரான் பற்றி என்ன நினைக்கிறீர்கள்; ஈரானைத் தாக்குவீர்களா?' என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், அணு உலைகளைத் தொடாமல் தாக்குதல் நடத்தப்படும் என கூறியிருந்தார். 'ஈரான் மீதான அணு ஆயுதத் தாக்குதலை ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கும் இல்லை' என்றே அவர் பதிலளித்தார்.
அச்சுறுத்தல்
இந்த விஷயத்தில் அவர் தவறு செய்துவிட்டார் என நினைக்கிறேன்.
உண்மையில், அணு ஆயுதங்கள் நமக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். அப்படி இருக்கையில், ஈரான் தாக்கினால் என்ன நடக்கும்? என்னைக் கேட்டால் அணு உலைகளை முதலில் தாக்குங்கள்.
மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே கூறுவேன். ஈரானின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்க விரும்பினால் தாக்கலாம். இருப்பினும், அவர்கள் திட்டம் என்ன என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.