ஆசிய - பசிபிக் கூட்டமைப்பு உச்சி மாநாடு புறக்கணித்தார் டிரம்ப்; கவனம் பெற்றார் சீன அதிபர்
ஆசிய - பசிபிக் கூட்டமைப்பு உச்சி மாநாடு புறக்கணித்தார் டிரம்ப்; கவனம் பெற்றார் சீன அதிபர்
ADDED : நவ 01, 2025 12:34 AM

கியோங்ஜு: தென் கொரியாவில் நடந்த ஆசிய - பசிபிக் பொரு ளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஷீ ஜின்பிங், உலகளாவிய தடையற்ற வர்த்தகத்தை பாதுகாக்க சீனா உதவும் என்று தெரிவித்தார்.
'அபெக்' எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு, கிழக்காசிய நாடான தென் கொரியாவில் உள்ள கியோங்ஜு நகரில் நேற்று துவங்கியது.
இருதரப்பு உறவு இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் கொரியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை நேற்று முன்தினம் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
இப்பேச்சில், அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கான தடைக்கு ஓராண்டு விலக்கு, அமெரிக்க வேளாண் பொருட்கள் கொள்முதல் உள்ளிட்டவை குறித்து சீனா சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பிரதிபலனாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த ஒட்டுமொத்த வரியில், 10 சதவீதத்தை குறைத்தார் டிரம்ப்.
இந்நிலையில், சீனா உடன் அதிகரித்து வரும் வர்த்தகப் போரை தணிக்க ஷீ ஜின்பிங்குடன் ஒப்பந்தங்களை எட்டிய உடன், ஆசிய - பசிபிக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாமல், ஒருநாள் முன்னதாகவே தென் கொரியாவில் இருந்து டிரம்ப் புறப்பட்டு சென்றார்.
தன் நாட்டு நலன்களுக்காக மட்டும் சீனா உடன் பேச்சு நடத்தி, சாதகமான முடிவுகளை தெரிந்து, உச்சி மாநாட்டை புறக் கணித்த டிரம்பின் செயல், அமெரிக்கா மீதான நற்பெயரை கெடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உச்சி மாநாட்டில் மையப்புள்ளியாக ஷீ ஜின்பிங் மாறினார்.
விரைவான மாற்றம் மாநாட்டில் ஷீ ஜின்பிங் பேசுகையில், ''சர்வதேச நிலைமை சிக்கலாகவும், நிலையற்றதாகவும் மாறி வருவதால், உலகம் விரைவான மாற்றத்துக்கு உள்ளாகிறது.
''காலங்கள் எவ்வளவு கொந்தளிப்பாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வினியோக தொடரில் நாம் நிலைத்தன்மையை பேண வேண்டும்.
''பசுமை தொழில்கள் மற்றும் துாய்மையான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த, மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது,'' என தெரிவித்தார்.
ஷீ ஜின்பிங் 11 ஆண்டுகளுக்கு பின், தென் கொரியாவுக்கு சென்றுள்ளார். மாநாட்டின் இடையே, ஜப்பான் பிரதமர் சனே டகாய்சி, கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுாட்டி சார்ன்விரகுல் ஆகியோரையும் ஜின்பிங் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
வட கொரியாவின் அணுசக்தி திட்டம் குறித்து விவாதிக்க, தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை இன்று சந்திக்க உள்ளார்.
டிரம்ப் சார்பாக மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க கருவூல செயலர் ஸ்காட் பெசன்ட், ''வர்த்தக உறவுகளை சீரமைத்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கை, ஒவ்வொரு நாடும் நியாயமான மற்றும் பரஸ்பர விதிமுறைகளின் கீழ் செயல்படுவதை உறுதி செய்யும்,'' என தெரிவித்தார்.

