என்னுடைய செயலை பார்த்து சுந்தர் பிச்சையே ஆடிப்போனார் ; டிரம்ப் பெருமிதம்
என்னுடைய செயலை பார்த்து சுந்தர் பிச்சையே ஆடிப்போனார் ; டிரம்ப் பெருமிதம்
ADDED : அக் 27, 2024 07:41 PM

வாஷிங்டன்: மெக்டொனால்டில் வேலை செய்து ஓட்டு கேட்ட நிகழ்வு குறித்து கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர்பிச்சை தொடர்பு கொண்டு தன்னை பாராட்டியதாக குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.,5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸூம், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப்பும் போட்டியிட்டுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மிகவும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
அண்மையில், பிலடெல்பியாவில் உள்ள மெக் டொனால்ட்ஸ் கடையில் வேலை செய்த டிரம்ப், அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை விட கூடுதலாக 15 நிமிடம் பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து விட்டதாகவும், கமலா ஹாரிஸ் தன்னுடைய இளம் வயதில் மெக்டொனால்டில் வேலை செய்தது எல்லாம் பொய் எனவும் கூறியிருந்தார்.
கமலா ஹாரிஸ் வேலை செய்ததாக எந்த தகவலும் இல்லை என்றும், அவர் குறிப்பிட்டு சொன்ன இடத்தில் அவர் வேலை செய்யவே இல்லை என்று மெக்டொனால்டு நிறுவனத்தின் மேனேஜர் கூறியதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மெக்டோனால்டில் தான் வேலை செய்த விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை தன்னை தொடர்பு கொண்டு பாராட்டியதாக டிரம்ப் கூறியுள்ளார். பிரெஞ்ச் பிரைஸ் செய்து ஓட்டு சேகரித்த விவகாரம், கூகுளில் நல்ல வரவேற்பை பெற்றதாக சுந்தர் பிச்சை கூறியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தன்னுடைய பிரசாரங்கள் கூகுளில் முடக்கப்படுவதாக சுந்தர் பிச்சையிடம் டிரம்ப் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.