காசா-இஸ்ரேல் போர்நிறுத்த திட்டம் வரவேற்பு: பிரதமர் மோடியின் பதிவை பகிர்ந்த டிரம்ப்
காசா-இஸ்ரேல் போர்நிறுத்த திட்டம் வரவேற்பு: பிரதமர் மோடியின் பதிவை பகிர்ந்த டிரம்ப்
ADDED : அக் 01, 2025 01:07 PM

நியுயார்க்: காசா-இஸ்ரேல் அமைதி பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை வரவேற்ற பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
இஸ்ரேல்-காசா போர் இடையே 2023ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 60,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இவ்விரு நாடுகள் இடையே போரில், இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா நிற்பதோடு, அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவை அழைத்து பேசியது.
நெதன்யாகுவிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் நிறுத்தத்திற்கான 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தை நெதன்யாகு ஏற்றுக் கொண்டு விட்டார் என்றும் கூறினார்.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து டிரம்ப் வெளியிட்ட 20 அம்ச திட்டத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை அண்மையில் வெளியிட்டு இருந்தார். நீண்ட, நிலைத்த அமைதிக்கான நடவடிக்கை என்றும் பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த வரவேற்பு பதிவை, டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பகிர்ந்துள்ள அவர், வேறு எந்த கருத்தையும் குறிப்பிடவில்லை.
பொதுவாக ட்ரூத் சோஷியல் பதிவில் எதை பகிர்ந்தாலும் அதில் ஏதேனும் குறிப்புகளையோ அல்லது கருத்துகளையோ பதிவிடுவது டிரம்பின் வழக்கம். ஆனால் பிரதமர் மோடியின் பதிவை பகிர்ந்த டிரம்ப், வழக்கமான பாணியில் எந்த கருத்தையும் சொல்லாமல் விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.