வீட்டருகே துப்பாக்கிச்சூடு; கொந்தளித்தார் டிரம்ப்; சரணடைய மாட்டேன் என ஆவேசம்
வீட்டருகே துப்பாக்கிச்சூடு; கொந்தளித்தார் டிரம்ப்; சரணடைய மாட்டேன் என ஆவேசம்
UPDATED : செப் 16, 2024 11:55 AM
ADDED : செப் 16, 2024 06:59 AM
முழு விபரம்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருபோதும் சரணடைய மாட்டேன் என டிரம்ப் கோபமாக தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தொடர்பாக நடந்த விவாத நிகழ்ச்சிக்குப் பின், ஜனநாயக கட்சியின் வேட்பாளரான துணை அதிபர் கமலா ஹாரிசின் மவுசு கூடியுள்ளதாக, கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடு
இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் தனது வீட்டில் இருக்கும் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கோல்ப் கிளப் அருகே, AK-47 துப்பாக்கியுடன் ஓடுவதை கண்ட ரகசிய போலீஸ் அதிகாரிகள் அவரை மடக்கி கைது செய்தனர். அந்த நபர் 58 வயதான Ryan Wesley Routh என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் எதற்கு துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பாதுகாப்பாக இருக்கிறார்!
'முன்னாள் அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார். இந்தச் சம்பவத்தை கொலை முயற்சியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்' என மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) தெரிவித்தது.
சரணடைய மாட்டேன்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது வீட்டின் அருகில் துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டன.
நீங்கள் முதலில் கேட்க வேண்டும் என்று நான் விரும்பினேன்: நான் பாதுகாப்பாகவும் நன்றாகவும் இருக்கிறேன். எதுவும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்! என கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த போது தாமஸ் மாத்யூ குரூக்ஸ், 20, துப்பாக்கியால் சுட்டார். காது பகுதியில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். தற்போது, டிரம்ப்பை மீண்டும் ஏ.கே., 47 ரக துப்பாக்கியால் 58 வயதான நபர் பலமுறை சுட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.