இன்று பதவியேற்கிறார் டிரம்ப்: உள் அரங்கில் பதவியேற்பது 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை!
இன்று பதவியேற்கிறார் டிரம்ப்: உள் அரங்கில் பதவியேற்பது 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை!
UPDATED : ஜன 20, 2025 01:33 AM
ADDED : ஜன 19, 2025 09:04 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் இன்று 20ம் தேதி பதவியேற்கிறார். கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகையின் உள் அரங்கில் பதவியேற்பு நடக்கிறது. 1985ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா, உள் அரங்கில் நடப்பது இதுவே முதல் முறை. அமெரிக்காவின் 47வது அதிபராகிறார் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், கமலா ஹாரிசை தோற்கடித்த டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர், அந்த நாட்டு வழக்கப்படி ஜன.,20ம் தேதி இன்று பதவியேற்கிறார்.
பாரம்பரிய தேவாலய சேவை, வெள்ளை மாளிகை தேநீர் விருந்து மற்றும் கேபிடலில் பதவியேற்பு விழா நடைபெறும். அதைத் தொடர்ந்து டிரம்பின் பதவியேற்பு உரை நடைபெறும்.
இந்த நிகழ்வில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் சுந்தர் பிச்சை போன்ற உலகளாவிய வணிகத் தலைவர்களும், பராக் ஒபாமா, கமலா ஹாரிஸ் மற்றும் ஹிலாரி கிளிண்டன் போன்ற அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்பர்.
டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்திய தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் சென்றுள்ளனர். பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக வாஷிங்டனில் நடந்த ஒரு தனியார் வரவேற்பு நிகழ்ச்சியிலும் இந்த ஜோடி கலந்து கொண்டது. நிகழ்ச்சியில் டிரம்புடன் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.