ADDED : நவ 11, 2024 01:01 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், இழுபறியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஏழு மாகாணங்களிலும், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வென்றுள்ளார். இதையடுத்து, அவருக்கான 'எலக்டோரல் காலேஜ்' ஆதரவு அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில், அரிசோனா உட்பட ஏழு முக்கிய மாகாணங்கள், 'ஸ்விங் ஸ்டேட்' எனப்படும் அலைபாயும் மாகாணங்களாகும். இங்கு யாருக்கு ஆதரவு கிடைக்கும் என்பதை கணிக்க முடியாது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் இந்த ஏழு மாகாணங்களில், நவேடா, விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய ஆறு மாகாணங்களில் டிரம்புக்கு அதிக ஆதரவு கிடைத்தது. அனைத்து மாகாணங்களிலும் ஓட்டு எண்ணிக்கை நேற்று முடிந்த நிலையில், அரிசோனாவிலும் டிரம்ப் வென்றார்.
இங்கு, எலக்டோரல் காலேஜ் எனப்படும் அதிபர் தேர்தல் முடிவை உறுதி செய்யும் மாகாணங்களின் பிரதிநிதிகள், 11 பேர் உள்ளனர். இந்த ஓட்டுகளும் கிடைத்ததைத் தொடர்ந்து, டிரம்புக்கான எலக்டோரல் காலேஜ் ஓட்டு எண்ணிக்கை, 312 ஆக உயர்ந்தது. கமலா ஹாரிசுக்கு, 226 ஓட்டுகள் கிடைத்துள்ளன.