கனடா கவர்னர் ட்ரூடோவிடம் விளக்குங்கள்: வம்புக்கு இழுத்தார் டிரம்ப்
கனடா கவர்னர் ட்ரூடோவிடம் விளக்குங்கள்: வம்புக்கு இழுத்தார் டிரம்ப்
UPDATED : மார் 05, 2025 10:02 PM
ADDED : மார் 05, 2025 07:43 AM

வாஷிங்டன்: அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரி விதிக்கப்படும் என கனடா அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு பொருட்களுக்கு மேலும் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜன., 20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரி விதிக்கப்படும் என கனடா அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு பொருட்களுக்கு மேலும் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, டிரம்ப் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா கவர்னர் ட்ரூடோவிடம், அவர் அமெரிக்கா மீது பழிவாங்கும் வரியை விதிக்கும்போது, நமது பரஸ்பர வரி உடனடியாக அதே அளவு அதிகரிக்கும் என்பதை விளக்குங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றும் யோசனையை அமெரிக்க அதிபர் கூறிய போது, கனடா பிரதமர் ட்ரூடோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது முதல் கனடா கவர்னர் என டிரம்ப் குறிப்பிட்டு பதிவுகளை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.