இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் துவக்குவது அநியாயம்: எலான் மஸ்க்கிற்கு டிரம்ப் எதிர்ப்பு
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் துவக்குவது அநியாயம்: எலான் மஸ்க்கிற்கு டிரம்ப் எதிர்ப்பு
UPDATED : பிப் 21, 2025 06:22 AM
ADDED : பிப் 20, 2025 08:19 PM

வாஷிங்டன்: வர்த்தக பற்றாக்குறை மற்றும் வரி விகிதங்களில் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கிளையை துவக்குவது அமெரிக்காவிற்கு இழைக்கப்படும் அநீதி எனக்கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆரம்பம் முதலில் இருந்தே, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து வருகிறார்.
இதனிடையே, டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க், மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆக உள்ளார். இந்த நிறுவனம் இந்தியாவில் வணிகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டியது. ஆனால், வரி காரணமாக அது செயல்பாட்டிற்கு வரவில்லை. சில நாட்களுக்கு முன்னர், மின்சார வாகனங்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை, எலான் மஸ்க் சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் குறிப்பிட்ட பணிகளுக்காக ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில், தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளதாவது: அனைத்து நாடுகளும் அமெரிக்காவிடம் இருந்து சில சலுகைகளை எடுத்துக் கொள்கின்றன. இதனை வரியை பயன்படுத்தி சாதிக்கின்றன. ஆனால், எலான் மஸ்க்கால் காரை அங்கு விற்பனை செய்ய முடியாது. இதற்கு உதாரணம் இந்தியா.
அங்கு எலான் மஸ்க் தொழிற்சாலை ஆரம்பிக்க நினைத்தால் அதில் பரவாயில்லை. ஆனால், அது அமெரிக்காவுக்கு இழைக்கப்படும் அநியாயம். மிகவும் அநியாயம். இவ்வாறு அவர் கூறினார்.

