ஒரே ராக்கெட்டில் 2 'லேண்டர்'கள்; நிலவில் ஆய்வு செய்ய பறந்தன
ஒரே ராக்கெட்டில் 2 'லேண்டர்'கள்; நிலவில் ஆய்வு செய்ய பறந்தன
ADDED : ஜன 16, 2025 03:57 AM

கேப் கேனவரல் : நிலவில் ஆய்வு செய்வதற்காக, அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின், 'லேண்டர்' சாதனங்களுடன், 'ஸ்பேஸ்எக்ஸ்' தனியார் நிறுவனத்தின் ராக்கெட் புறப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ளது. விண்வெளிக்கு சுற்றுலாவையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்று, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, நிலவை நோக்கி நேற்று புறப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த 'ஐஸ்பேஸ்' நிறுவனம் ஆகியவற்றின், லேண்டர் எனப்படும் நிலவில் தரையிறங்கும் சாதனங்களுடன் புறப்பட்டுள்ளது. இந்த லேண்டர் சாதனங்களில், 'ரோவர்' எனப்படும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி ஆய்வு செய்யும் சாதனங்கள் இடம்பெற்றுள்ளன.
நிலவில் ஆய்வு செய்து, அதில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு மீண்டும் திரும்புவது இந்த பயணத்தின் நோக்கம். அமெரிக்க நிறுவனத்தின் லேண்டர், மே மாத துவக்கத்திலும், ஜப்பான் நிறுவனத்தின் லேண்டர் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் நிலவில் தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை, அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வுகள் செய்துள்ளன. அமெரிக்கா மட்டுமே மனிதர்களை நிலவுக்கு அனுப்பியுள்ளது.