4 கி.மீ.க்கு அப்பால் இருந்த ரஷ்யர்கள் 2 பேரை சுட்டு வீழ்த்திய உக்ரைன் வீரர்
4 கி.மீ.க்கு அப்பால் இருந்த ரஷ்யர்கள் 2 பேரை சுட்டு வீழ்த்திய உக்ரைன் வீரர்
ADDED : ஆக 18, 2025 04:52 PM

கீவ்: போர்க்களத்தில் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ரஷ்ய வீரர்கள் இரண்டுபேரை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தி உக்ரைன் வீரர் சாதனை படைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நடந்த ரஷ்யா, உக்ரைன் இடையே நடந்த போரின்போது, கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் இருதரப்புக்கும் மோதல் நடந்தது.
அப்போது போக்ரோவ்ஸ்க் நகருக்கு அருகில் உக்ரைனின் துப்பாக்கி சுடும் பிரிவை சேர்ந்த வீரர் வியாசெஸ்லாவ் கோவல்ஸ்கி, 4 கிலோ மீட்டர் தொலைவில் சுட்டு ரஷ்ய வீரர்கள் 2 பேரை வீழ்த்தி சாதனை படைத்ததாக உக்ரைன் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் தயாரிக்கப்பட்ட 14.5 மிமீ அலிகேட்டர் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட குண்டு, செயற்கை நுண்ணறிவு மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் அதன் இலக்கை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உக்ரைனின் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் துணை அமைச்சர் அன்டன் கெராஷ்செங்கோ பதிவிட்டுள்ளதாவது:
உக்ரேனிய துப்பாக்கி சுடும் வீரர், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போர் வரலாற்றில் நீண்ட துாரத்தில் துப்பாக்கியால் சுட்டு, போக்ரோவ்ஸ்க்- மிர்னோஹ்ராட் திசையில் இரண்டு ரஷ்ய வீரர்களை வீழ்த்தினார்.
இது தனித்துவமான ஷாட். யுஏவி அமைப்பால் வழிநடத்தப்பட்டு, உக்ரேனிய தயாரிப்பான வெப்ப இமேஜிங் பார்வை பொருத்தப்பட்ட 14.5 மிமீ அலிகேட்டர் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டது.
உக்ரைன் ராணுவத்தை சேர்ந்த 58 வயதான மூத்த துப்பாக்கி சுடும் வீரர், கடந்த நவம்பர் 2023ல் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஹொரைஸனின் லார்ட் துப்பாக்கியைப் பயன்படுத்தி 3.8 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஒரு ரஷ்ய வீரரை கொன்ற முந்தைய உலக சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.