ஓரினச்சேர்க்கை ஆண்கள், திருநங்கைகளின்மருத்துவ தேவைகளுக்கு கவனம் முக்கியம்
ஓரினச்சேர்க்கை ஆண்கள், திருநங்கைகளின்மருத்துவ தேவைகளுக்கு கவனம் முக்கியம்
UPDATED : ஜூலை 13, 2011 04:16 AM
ADDED : ஜூலை 13, 2011 12:16 AM
ஜெனிவா:ஓரினச்சேர்க்கை ஆண்கள் மற்றும் திருநங்கைகளின் மருத்துவ தேவை தொடர்பாக, இந்திய அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:உலகின் பிற நாடுகளை விட, ஆசியாவில் 40 சதவீதம் பேர் எச்.ஐ.வி., மற்றும் பாலியல் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கை ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஆசிய நாடுகள் பலவற்றில் திருநங்கைகளுக்கு அடிப்படையான சட்ட உரிமை கூட கிடையாது. பெரும்பாலும் திருநங்கைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக பாலியலில் ஈடுபடுத்தப்பட்டு, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர். இதை தடுக்க, திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கை ஆண்களிடையே நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வகையில், திருநங்கைகளுக்காக நல்லெண்ண அடிப்படையில் சில நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் இதற்கென சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனினும், இது போதாது.
இந்தியாவில், பத்து லட்சத்துக்கும் அதிகமான திருநங்கைகளும், மூன்று கோடி ஓரினச்சேர்க்கை ஆண்களும் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் எச்.ஐ.வி., மற்றும் பாலியல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்கவும், மற்றவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதற்காக, நோய்த் தடுப்புச் சட்டங்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்தியா முன்வர வேண்டும். திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கை ஆண்கள் உள்ளடங்கிய மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.