sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு சட்டவிரோதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

/

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு சட்டவிரோதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு சட்டவிரோதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு சட்டவிரோதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : ஆக 31, 2025 01:26 AM

Google News

ADDED : ஆக 31, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, சர்வதேச நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் தன் இஷ்டப்படி கூடுதல் வரி விதித்தது சட்டவிரோதமானது' என, அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார்.

இந்த வரி விதிப்பு அமெரிக்க உற்பத்தியாளர்களை பாதுகாக்கவும், வர்த்தக ஒப்பந்தங்களை பெறவும் செய்யப்பட்டவை என்றும் கூறினார். இதற்காக, அமெரிக்காவின் சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தை, அவர் பயன்படுத்தினார்.

இதனால், சர்வதேச நாடுகள் மட்டுமின்றி, வெளிநாட்டு இறக்குமதியை நம்பி தொழில் செய்யும் அமெரிக்க வர்த்தகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அமெரிக்காவை சேர்ந்த ஐந்து சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஐனநாயக கட்சி ஆளும் 12 மாகாணங்கள் சார்பில், நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மே மாதம் அளித்த தீர்ப்பில், 'வரி விதிப்பு உத்தரவுகள் அமெரிக்க அதிபரின் அதிகாரத்தை மீறியவை' என்று தெரிவித்தனர். இத்தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தை டிரம்ப் அரசு நாடியது.

அரசின் மனுவை, ஏழு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது.தொழில் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'வர்த்தக பற்றாக்குறை என்பது தேசிய அவசரநிலை இல்லை' என்று வாதிட்டனர்.

அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அதிபருக்கு வரி விதிக்கும் அதிகாரம் உள்ளது. அதிபரின் நடவடிக்கையால் அரசுக்கு பல பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த பின், பெரும்பான்மையாக நான்கு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், சர்வதேச வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளதாவது:

சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகாரங்கள் சட்டம், வரம்பற்ற வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கவில்லை. அந்த சட்டத்தில் வரி விதிப்புகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

வரி விதிக்கும் அதிகாரம், அரசியலமைப்பின்படி, பார்லிமென்டிற்கு மட்டுமே உள்ளது. அமெரிக்கா 49 ஆண்டு களாக வர்த்தக பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

எனவே, இது அவசரநிலை அச்சுறுத்தல் என்ற வரையறையை பூர்த்தி செய்யவில்லை. மேலும், வரி விதிப்புக்கு என கால வரம்பும் நிர்ணயிக்கவில்லை. இதன் மூலம் அதிபரின் வரி விதிப்பு உத்தரவுகள் சட்டவிரோதமானவை என நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இருப்பினும், டிரம்பின் வரி விதிப்பை நீதிமன்றம் உடனடியாக ரத்து செய்யவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14 வரை அவகாசம் அளித்துள்ளது. அதுவரை டிரம்பின் வரி உத்தரவுகள் தொடரும்.

'அமெரிக்காவை அழித்து விடும்' அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம், வரி விதிப்பு உத்தரவு சட்டவிரோதம் என தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு அதிபர் டிரம்ப் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: மேல்முறையீட்டு நீதிமன்றம், வரிகளை நீக்க வேண்டும் என, ஒரு தலைபட்சமாக தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த சட்ட போராட்டத்தின் இறுதியில் அமெரிக்கா வெல்லும். இந்த வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டுக்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும். நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும். அமெரிக்காவை அழித்து விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us