வெளிநாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி... நிறுத்தம்: 2023ல் மட்டும் 5.5 லட்சம் கோடி வழங்கியது
வெளிநாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி... நிறுத்தம்: 2023ல் மட்டும் 5.5 லட்சம் கோடி வழங்கியது
UPDATED : ஜன 26, 2025 12:44 AM
ADDED : ஜன 26, 2025 12:09 AM

வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தொடர்ந்து அதிரடியான
முடிவுகளை எடுத்து வருகிறார். வெளிநாடுகளுக்கு கடந்த 2023ல் மட்டுமே 5.5 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை அமெரிக்கா வழங்கிய நிலையில், இதை தற்காலிகமாக
நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள், ஏழை நாடுகளுக்கு பல வகையான நிதி உதவிகளை செய்கின்றன. அந்த வகையில் வழங்கப்படும் உதவிகள் மூன்று வகைகளாக பார்க்கப்படுகின்றன. வளர்ச்சி திட்டங்களுக்கான வெளிநாட்டு உதவி, ராணுவ உதவி மற்றும் மனிதநேய அடிப்படையிலான உதவி என்று இவை வகைப்படுத்தப்படுகின்றன.
எதிர்ப்பு
இதனால் நிதியுதவி பெறும் நாடுகள் வளர்ச்சி அடைவது, நிதியுதவி அளிக்கும் நாட்டுக்கு வர்த்தக ரீதியில் தன் பொருட்களை விற்பதற்கு உதவும். பெரும்பாலான உதவிகளில், கொஞ்சம் சுயநலமும் உண்டு. ஆனாலும், நிதியுதவி பெறும் நாடுகளில் வளர்ச்சி ஏற்படும்.
அந்த வகையில், உலகின் 'பெரியண்ணன்' என்று அழைக்கப்படும் அமெரிக்கா, பல நாடுகளுக்கும் ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் நிதியுதவிகளை வழங்கி வருகிறது. கடந்த, 2023ல் மட்டும், 5.5 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இது, அந்த நாட்டின் மொத்த செலவினத்தில், 1 சதவீதம் மட்டுமே.
ஆனால், தங்களுடைய வரிப் பணம் மற்ற நாடுகளுக்கு வாரி வழங்கப்படுவதற்கு, அமெரிக்காவில் சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக போர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு பெரும்பாலான மக்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார்; தொடர்ந்து அதிரடியான பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப் போவதாகவும், அந்த நிதியை மறுஆய்வு செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, வெளியுறவுத் துறைக்கு, அந்த நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இந்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகிஉள்ளன.
ஆலோசனை
அந்த உத்தரவின்படி, வெளிநாடுகளுக்கு எந்த ஒரு புதிய நிதியுதவியையும் வழங்கக் கூடாது. ஏற்கனவே வழங்கப்படும் நிதியுதவிகளை நீட்டிக்கவும் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதிபர் டொனால்டு டிரம்புடன் ஆலோசனை செய்து, ஆய்வு செய்த பின், நிதிஉதவிகள் வழங்குவது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா மூன்றாண்டுகளாக போர் நடத்தி வரும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு, முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிதியுதவிகளை வழங்கி வந்தார். மேலும், ராணுவ உதவியும் அளித்து வந்தார். அதை நிறுத்தி வைக்கும்படி புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கான உதவிகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் தொடர்பான சிகிச்சைகளுக்காக, பி.இ.பி.எப்.ஏ.ஆர்., என்ற அமைப்புக்கு வழங்கப்படும் நிதியுதவி தொடரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதுபோல, சூடான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பட்டினி ஒழிப்பு திட்டங்களுக்கான நிதியுதவி தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

