வெளிநாடுகளுக்கு நிதி உதவி; உடனடியாக நிறுத்த டிரம்ப் உத்தரவு
வெளிநாடுகளுக்கு நிதி உதவி; உடனடியாக நிறுத்த டிரம்ப் உத்தரவு
ADDED : ஜன 25, 2025 03:10 PM

வாஷிங்டன்: அனைத்து வெளிநாடுகளுக்கும் வழங்கி வந்த நிதியுதவியை அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய அவர், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பவும் ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில், அடுத்தபடியாக வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவியை அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்த உத்தரவிட்டு உள்ளார். இதனால், அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச வளர்ச்சி முகமை மூலம், வெளிநாடுகளுக்கு வழங்கி வந்த பல கோடி அமெரிக்க டாலர் நிதியை பெறுவதில் பல நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க பட்ஜெட்டில் இந்த நிதி குறைவான தொகை என்றாலும், இதனை வழங்குவதற்கு குடியரசு கட்சி எம்.பி.,க்களும், டிரம்ப் நிர்வாக அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவியை உடனடியாக நிறுத்தவும், புதிய உதவி வழங்கவும் தடை செய்யப்பட்டு உள்ளது. வருங்காலத்தில், இந்த உதவிகள் டிரம்ப்பின் வெளிநாட்டு கொள்கை திட்டங்களுடன் ஒத்துப்போகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய விதிமுறைகள் வகுக்கப்படும். இதன் பிறகு, இந்த உதவியை தொடர்வதா, மாற்றியமைப்பதா அல்லது நிரந்தரமாக நிறுத்துவதா என்பது குறித்து 85 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இருப்பினும், இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான அவசர உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் மற்றும் தைவானுக்கு ராணுவ ரீதியில் நிதியுதவி பெறுவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
உலகில் பல நாடுகளுக்கு சுகாதாரம், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. அதில் அதிக நிதி வழங்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு 64 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா வழங்கி உள்ளது. 2024ம் ஆண்டுக்கான விவரம் கிடைக்கவில்லை.
இந்த உதவியை அமெரிக்கா நிறுத்தினாலும், சூடான் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு உணவுத் தேவைக்கான அவசர நிதியுதவி வழங்குவதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆப்ரிக்கா கண்டம் மற்றும் வளர்ந்த நாடுகளில் எச்ஐவி பரவல் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. கடந்த 2003ம் ஆண்டு ஜார்ஜ் புஷ்ஷால் துவக்கப்பட்ட இந்த உதவியையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி உள்ளது. இதன் காரணமாக, மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் செய்வது அறியாது திகைத்து உள்ளனர்.