அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்; வெள்ளை மாளிகை, துணை அதிபர் வான்ஸ் சொல்வது இதுதான்:
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்; வெள்ளை மாளிகை, துணை அதிபர் வான்ஸ் சொல்வது இதுதான்:
UPDATED : அக் 02, 2025 11:12 AM
ADDED : அக் 02, 2025 07:23 AM

வாஷிங்டன்: அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் தொடர்பாக வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், துணை அதிபர் வான்ஸ் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு செலவினங்களுக்கான நிதி ஒப்புதலை பார்லிமென்ட் வழங்காத நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் முடங்கியது. இதனால் அத்தியாவசிய பணிகளில் இல்லாத அரசு ஊழியர்கள் 7.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அந்த நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: ஜனநாயகக் கட்சியினர் சுகாதாரப் பராமரிப்பு செலவுகளை குறைப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்கள்.
ஆனாலும் மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற அதிபர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை எடுத்த போது மருந்து விலைகளை குறைக்க ஜனநாயகக் கட்சியினர் எங்களுக்கு உதவ ஏதும் செய்யவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் செய்தது அரசாங்கத்தை முடக்குவது தான்.
சட்டவிரோத வெளிநாட்டினருக்கான சுகாதாரப் பராமரிப்பு நிதிக்கு பில்லியன் கணக்கான டாலர்களை நாங்கள் வழங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: காங்கிரசில் உள்ள ஜனநாயக கட்சியினர் அமெரிக்க அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக முடக்கி விட்டனர். ஜனநாயக கட்சியினர் பாகுபாடான அரசியல் விளையாட்டை கையில் எடுத்துள்ளனர்.
எனவே அமெரிக்க மக்கள் இன்று காலை விழித்தெழுந்து வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்கள். அரசாங்கம் இப்பொழுது ஏன் மூடப்பட்டுள்ளது? அமெரிக்கா 137 டிரில்லியன் டாலர் கடனில் உள்ளது.
சட்டத்தை மீறி நம் நாட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு வரி செலுத்துவோர் நிதியில் இலவச சுகாதாரப் பராமரிப்பு திட்டத்தை வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.