ஹசீனாவுக்கு எதிராக போராடிய மகளிருக்கு அமெரிக்கா கவுரவம்
ஹசீனாவுக்கு எதிராக போராடிய மகளிருக்கு அமெரிக்கா கவுரவம்
ADDED : ஏப் 01, 2025 04:00 AM

நியூயார்க்: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தை தலைமை ஏற்று வழிநடத்திய மாணவியரை அமெரிக்க அரசு கவுரவிக்கிறது.
அமெரிக்காவில், ஐ.டபிள்யு.ஓ.சி., எனப்படும், துணிச்சலுக்கான சர்வதேச விருதுகளை அந்நாட்டு அரசு ஆண்டுதோறும் அளித்து வருகிறது. கடந்த, 2007 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது வழங்கும் விழாவின், 19ம் ஆண்டு நிகழ்வு இன்று நடக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் அதிபரின் மனைவி மெலானியா டிரம்ப் இந்த விருதுகளை வழங்க உள்ளனர். உலக அளவில் அசாதாரணமான சந்தர்ப்பங்களில் துணிச்சல், வலிமை மற்றும் தலைமைப்பண்பை வெளிப்படுத்திய பெண்களை இந்த விருது கவுரவிக்கிறது.
இந்த ஆண்டுக்கான விருது பெறும் பட்டியலில், இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர் நாமினி விஜேதாசா, இஸ்ரேலைச் சேர்ந்த அமித் சோசானா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கையில் நடந்த போர் குறித்து தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தவர் நாமினி விஜேதாசா. தற்போது, அரசு ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியபோது, பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களில் அமித் சோசானாவும் ஒருவர்.
இந்த வரிசையில், வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவில், துணிச்சலுடனும், தலைமைப் பண்புடனும் களத்தில் பணியாற்றிய பெண்களும் கவுரவிக்கப்பட உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
விருது பெறப்போகும் பெண்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.