அமெரிக்கராணுவ ஹெலிகாப்டரை சுட்டுவீழத்திய தலிபான்கள் பலி
அமெரிக்கராணுவ ஹெலிகாப்டரை சுட்டுவீழத்திய தலிபான்கள் பலி
ADDED : ஆக 11, 2011 02:47 AM
வாஷிங்டன்: ஆப்கானில் ராணுவ ஹெலிகாப்டரை சுட்டுவீழத்தியதில் 30 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்திற்கு பதிலடி தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட தலிபான்கள் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் காபூலில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மீது தலிபான்கள் ராக்கெட் குண்டுவீசி தாக்கியதில் சிறப்பு அமெரிக்க ராணுவத்தினர் 30 பேர் பலியாயினர். இத்தாக்குதலுக்கு காரணமான தலிபான்கள் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானதாக அமெரிக்க சிறப்பு படையின் புதிய தளபதி ஜெனரல் ஜான் ஆலன் தெரிவித்தார். இது குறித்து நேற்று செய்தியாள்களிடம் கூறுகையில், கடந்த 6-ம் தேதி ஆப்கானின் வர்டாக் மாகாணத்தில் டாங்கே பள்ளத்தாக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதில் 30 வீரர்கள் பலியாயினர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக கடந்த 8-ம் தேதி நேட்டோப்படைகளின் உதவியுடன் நள்ளிரவி்ல் தலிபான்கள் மீது எப்-16 ரக போர் விமானம் மூலம் குண்வீசி தாக்குதல் நடத்தினோம். இதில் 10-க்கும் மேற்பட்ட தலிபான்கள் பலியாகியுள்ளனர். முன்னதாக கடந்த 6-ம் தேதி நடந்த சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனங்களை போக்குவிதமாக தலிபான்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.