ஈரானுக்கு அமெரிக்கா.தாராளம் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தால் சலுகை
ஈரானுக்கு அமெரிக்கா.தாராளம் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தால் சலுகை
UPDATED : ஜூன் 28, 2025 11:58 PM
ADDED : ஜூன் 28, 2025 11:43 PM

வாஷிங்டன் : இதுவரை உலகம் காணாத பயங்கர தாக்குதல் நடத்தியும், அசராமல் பதிலடி கொடுத்த ஈரானுடன் சமரச போக்குக்கு இறங்கி வருகிறார், அமெரிக்க அதிபர் டிரம்ப். அணு ஆயுத உற்பத்தியை நிறுத்திக் கொள்வது சம்பந்தமாக பேச்சு நடத்த சம்மதித்தால், அதற்கு பரிசாக ஏராளமான சலுகைகளை வழங்க டிரம்ப் முன்வந்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றஞ்சாட்டி, அதே பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அந்நாட்டின் மீது கடந்த 13ல் தாக்குதல் நடத்தியது. உடன், ஈரான் பலமான பதிலடி கொடுத்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தலையிட்டு, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டு வீசியது.
போர் நிறுத்தம்
அத்துடன், ஈரான் அடங்கிப் போகும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால், ஈரான் பணியவில்லை. இஸ்ரேலுக்கு பதிலடியாக விமான தாக்குதல் நடத்தியதுடன், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அதன்பின், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். கடந்த 2015ல், இதேபோல ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்ய நேட்டோ நாடுகள் முன்வந்தன. ஆனால், 2018ல் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் அதை ஏற்காமல் வெளியேறினார்.
ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். இந்த காலகட்டத்தில் ஈரானும், தன் யுரேனியம் வளத்தை செறிவூட்டி வந்தது. எந்த நேரத்திலும் அணு ஆயுதத்தை தயாரிக்கலாம் என்ற நிலை உருவானது.
இந்நிலையில், மீண்டும் அதிபரான டிரம்ப், ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை எப்படியாவது நிறுத்த விரும்பினார். ஆனால், அவர் போட்ட நிபந்தனைகளுக்கு ஈரான் சம்மதிக்கவில்லை. ஐந்து கட்டமாக பேச்சு நடந்தும் பலன் இல்லை.
இந்த பின்னணியில் தான், ஈரான் மீது இஸ்ரேல் போரை துவங்கியது. ஈரான் அணுகுண்டு தயாரித்தால், அதன் முதல் இலக்கு இஸ்ரேலாகத்தான் இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், ஈரானின் அணு ஆயுத தளங்களை மொத்தமாக அழிக்க இஸ்ரேல் விரும்பியது.
அமெரிக்காவின் உதவி இல்லாமல் இஸ்ரேல் அதை சாதிக்க இயலாது. எனவே, டிரம்பிடம் உதவி கேட்டது.
அதன்படி, தங்களிடம் உள்ள மிக அதிக சக்தி வாய்ந்த குண்டுகளையும், விமானங்களையும் பயன்படுத்தி, ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
பெரிய பலன் இல்லை
இதில், அந்த தளங்கள் அடியோடு நாசமாகி விட்டதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால், தாக்குதலால் பெரிய பலன் இல்லை; ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு கட்டமைப்பு இன்னும் அப்படியே இருக்கிறது என்று அமெரிக்க உளவு துறை அறிக்கை அளித்தது. ஐரோப்பிய அரசுகளின் உளவு அமைப்புகளும் இதை ஆமோதித்தன.
இதனால், டிரம்ப் கடுப்பானார். அந்த செய்திகளை நம்ப வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். எனினும், ஈரானுடன் சமாதானமாக பேசி ஒரு உடன்பாடு காண்பதை தவிர, வேறு வழி இல்லை என ஆலோசகர்கள் சொன்னதை, அவர் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டார்.
பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தால், பல சலுகைகளை வழங்குவதாக ஈரானுக்கு, டிரம்ப் ஆசை காட்டியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தில், 2.5 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய ஏற்பாடு செய்வதாக சொன்னார். ஈரான் மீதான சில பொருளாதார தடைகள் நீக்கப்படும்; வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள 50,100 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஈரான் இதற்கு நேரடியாக இதுவரை பதில் சொல்லவில்லை. ஆனால், ஈரான் மத தலைவர் கமேனிக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்தால், பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து யோசிப்பதாக ஈரான் அரசு தெரிவித்துஉள்ளது.
இது டிரம்புக்கு பெரிய பிரச்னை இல்லை. அதிரடியாக பல அறிவிப்புகளை வெளியிடுவதும், பின்னர் அவற்றை வாபஸ் பெறுவதுமாக அவர் பல்டி அடித்து வருவதால், ஈரானின் நிபந்தனையை ஏற்பது சாத்தியமே என நிபுணர்கள் கூறுகின்றனர்.