அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அடுத்த அதிரடி! காசாவை எடுத்துக் கொள்வதாக அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அடுத்த அதிரடி! காசாவை எடுத்துக் கொள்வதாக அறிவிப்பு
ADDED : பிப் 06, 2025 12:53 AM
வாஷிங்டன்: ''பாலஸ்தீனத்தின் காசாவை நாங்கள் எடுத்துக் கொள்ள உள்ளோம். அதை சொந்தமாக்கி, அங்கு பொருளாதார வளர்ச்சியுடன், வீடு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை உருவாக்குவோம்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வந்தது.
போரை தற்காலிகமாக நிறுத்த இரு தரப்புக்கும் இடையே கடந்த மாதம் உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவின் அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்பை வாஷிங்டனில் நேற்று சந்தித்தார்.
அதிபராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார். இந்நிலையில், நெதன்யாகுவுடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் நேற்று முன்தினம் கூறியதாவது:
காசா பகுதி தற்போது சிதிலமடைந்த பிரதேசமாக உள்ளது. அங்கு அனைத்து கட்டடங்களும் இடிந்துள்ளன. மக்கள் இடிபாடுகளிலும், பதுங்கு குழிகளிலும் வசித்து வருகின்றனர்.
காசாவை இதுவரை மரணம் மற்றும் அழிவின் பகுதியாகவே மக்கள் பார்த்து வந்துள்ளனர். அதன் உண்மையான வளத்தை யாரும் பார்க்கவில்லை. காசா பகுதியை நாங்கள் எடுத்துக் கொள்வோம்.
அதன் முழு உரிமையை எடுத்துக் கொள்வோம். அங்கு பொருளாதார நடவடிக்கைகளை எடுப்போம். ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
அங்குள்ள அனைத்து வெடிகுண்டுகளை; ஆயுதங்களை நீக்குவோம். அமைதி பிரதேசமாக மாற்றுவோம். அங்கு அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ வழி செய்வோம். இதில் பாலஸ்தீனர்களும் இருப்பர். இது நீண்டகால திட்டமாகும். அங்குள்ள நிலைமையை மாற்ற தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து நெதன்யாகு கூறியதாவது:
காசா பகுதியானது, மீண்டும் அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே இஸ்ரேலின் நோக்கம். இத்தனை ஆண்டுகளாக, பயங்கரவாதத்தால் அந்தப் பகுதி பாதிக்கப்பட்டது. அதில் இருந்து அந்தப் பகுதியை மீட்க வேண்டும்.
இது தொடர்பாக, அதிபர் டொனால்டு டிரம்ப் சில யோசனைகளை கூறியுள்ளார். சாத்தியமென்றால், அதற்கு ஒத்துழைக்க நாங்களும் தயார். மேற்காசியாவில் அமைதி நிலவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.