மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ADDED : டிச 02, 2024 08:35 AM

வாஷிங்டன்: அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தனது மகன் ஹன்டர் பைடனுக்கு அதிபர் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கினார்.
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, போலி தகவல் வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது.
இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மகனை விடுவித்து விடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஹன்டர் பைடனின் சிறை தண்டனையை அதிபர் பைடன் குறைக்க மாட்டார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை கூறியிருந்தது.
இந்த நிலையில், தனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் ஆவணங்களில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இன்று எனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளேன். நான் அதிபராக பொறுப்பேற்றது முதல் நீதித்துறையில் தலையிட மாட்டேன் என்று சொன்னபடி, இருந்து வருகிறேன்.
வீண் பழி சுமத்தி என் மகனை சிறையில் அடைத்த போதும், நான் தலையிடவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் மகனுக்கு அநீதி இழைக்கப்பட்டது. நான் தற்போது பொது மன்னிப்பு வழங்கியுள்ளேன்,' எனக் கூறினார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் கட்சி தோல்வியடைந்தது. இவர் ஜனவரி 14ம் தேதி வரையில் மட்டுமே அதிபராக இருக்க முடியும் சூழலில், மகனுக்கு அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.