இந்தியாவுக்கான வரியை நி றுத்த யோசிப்பேன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
இந்தியாவுக்கான வரியை நி றுத்த யோசிப்பேன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
ADDED : ஆக 17, 2025 01:06 AM

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இரண்டாம் நிலை வரி நிறுத்தப்படலாம்,” என கூறினார்.
ரஷ்யா தள்ளுபடி விலையில் வழங்குவதால், அதனிடமிருந்து மாதந்தோறும் கோடிக்கணக்கான பேரல்கள் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது.
இதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார். இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், ரஷ்யா அந்த பணத்தை வைத்து உக்ரைனுடன் தொடர்ந்து போரில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, 25 சதவீதம் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இது கடந்த, 7ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக, 25 சதவீத வரியை விதித்தார். இது, வரும் 27 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த வரி விதிப்பால் இந்திய - அமெரிக்க உறவு மோசமடைந்துள்ளது. மேலும், நம் வெளியுறவு அமைச்சகம் இந்த வரி விதிப்பை நியாயமற்றது என கண்டித்தது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்புக்கு ஏற்பாடானது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், 'பேச்சு சரியாக செல்லவில்லை எனில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீதான இரண்டாம் நிலை வரி அதிகரிக்கக் கூடும். கூட்டம் நல்லபடியாக முடிந்தால் வரிகள் தளர்த்தப்படலாம்' என கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்காவில் நேற்று, டிரம்ப் - புடின் சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்புக்கு புறப்பட்ட டிரம்ப், விமானத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவுக்கு கூடுதல் இரண்டாம் நிலை வரி நிறுத்தப்படலாம். ரஷ்யா, தன்னிடம் 40 சதவீத கச்சா எண்ணெய் வாங்கிய வாடிக்கையாளரான இந்தியாவை இழந்து விட்டது. சீனாவும் அதிக அளவு எண்ணெய் வாங்குகிறது.
“அதற்காக இரண்டாம் நிலை வரி விதிக்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை அதை நிறுத்தி வைப்பேன். தேவைப்பட்டால் வரி விதிப்பேன்,” என்றார்.
அதன்பின், அதிபர்கள் டிரம்ப் - புடின் சந்தித்து பேச்சு நடத்தினர். இது ஆக்கப்பூர்வமான உச்சி மாநாடு என இருவரும் கூறினர். சந்திப்பு முடிந்து செல்லும் போது மீண்டும் இந்தியாவுக்கான வரி விதிப்பு குறித்து டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து யோசிப்பேன்,” என்றார்.