நோபல் பரிசுக்கு ஏங்கிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ... ஏமாற்றம்: வெனிசுலா சமூக ஆர்வலருக்கு கிடைக்கிறது பரிசு
நோபல் பரிசுக்கு ஏங்கிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ... ஏமாற்றம்: வெனிசுலா சமூக ஆர்வலருக்கு கிடைக்கிறது பரிசு
ADDED : அக் 10, 2025 10:27 PM

ஓஸ்லோ:நான்கு அமெரிக்க அதிபர்கள், ஒரு துணை அதிபர் வரிசையில், அதிலும் அதிக போர்களை நிறுத்திய சாதனைக்காக, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறி வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. வெனிசுலா சமூக ஆர்வலர் மரியா கொரினா மச்சாடோவுக்கு, இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த வேதியியலாளரும், தொழில் அதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இது, உலகின் மிகவும் உயர்வான விருதாக கருதப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி என ஆறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவது மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.
வழக்கம் போல, இந்தாண்டுக்கான விருதுகளுக்கு உரியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டு, அமைதிக்கான நோபல் பரிசு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதற்கு முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இதற்கு முன், நான்கு அமெரிக்க அதிபர்கள், ஒரு துணை அதிபர், அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.
போர் நிறுத்துவதற்கு உதவியது, ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சி போன்றவற்றுக்காக, அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தியோடர் ரூஸ்வெல்ட் - 1906, உட்ரோ வில்சன் - 1919, ஜிம்மி கார்ட்டர் - 2002, பராக் ஒபாமா - 2009, துணை அதிபர் அல்கோர் 2007 ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தாண்டு ஜனவரியில், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மனதில், இந்த விருது கனவு இருந்து வந்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் உட்பட ஏழு போர்களை நிறுத்தியுள்ளதாக, கடந்த சில மாதங்களாகவே அவர் கூறி வந்தார். இதற்காக தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உடனே, எட்டு போர்களை நிறுத்தியதால், நோபல் பரிசு தனக்கு நிச்சயம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இதற்கு முன் எந்த அதிபரும் செய்யாத சாதனையை செய்துள்ளதால், நோபல் பரிசு தனக்கு வழங்காவிட்டால், அது அமெரிக்காவை அவமதிக்கும் செயல் என்றும் டிரம்ப் கூறினார்.
டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரைப்பதாக பல நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மரியா கொரினா மச்சாடோ, 58, விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், டிரம்ப் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைதியை விட, நோபல் பரிசு குழுவினர் அரசியலையே பார்த்துள்ளனர் என்று, அமெரிக்க அதிபரின் மாளிகையான வெள்ளை மாளிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று பரிசு அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் கூட, பராக் ஒபாமாவுக்கே கொடுத்து விட்டனர்; எனக்கு கொடுக்க மாட்டார்களா என்று, டிரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார்.
வழக்கமாக, நோபல் பரிசுக்கு சிலருடைய பெயர்கள் பரிந்துரைக்கப்படும். ஆனால், அது ரகசியமாக வைக்கப்படும். அதுபோல யாரும் தனக்கு பரிசு வழங்க வேண்டும் என்று கூறியதில்லை.
ஆனால், இதையெல்லாம் மீறி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீர் என பலரும் டிரம்பின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தனர்.