அமெரிக்கா அதிபர் தேர்தல்; கமலாவை முந்துகிறார் டிரம்ப்; கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!
அமெரிக்கா அதிபர் தேர்தல்; கமலாவை முந்துகிறார் டிரம்ப்; கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!
ADDED : அக் 26, 2024 12:30 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். அமெரிக்க தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது குறித்து அமெரிக்காவின் The Wall Street Journal' என்ற செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 19-22 க்கு இடையில் 1,500 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் (registered voters) இடம் கருத்து கேட்கப்பட்டது.
கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. டிரம்பிற்கு ஓட்டளிக்க 47 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். கமலா ஹாரிசுக்கு 45 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இரண்டு அதிபர் வேட்பாளர்களுக்கும் இன்னும் 50 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவே உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், கமலாவுக்கு 49 சதவீதம் பேரும், டிரம்ப்வுக்கு 47 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப்பை விட கமலா, முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது டிரெண்ட் என்பது முற்றிலுமாக மாறி உள்ளது. இதனால் டிரம்ப் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்று, வெள்ளை மாளிகையில் அமர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.