ADDED : செப் 12, 2025 02:16 AM

ஓரெம்:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நெருக்கமானவரும், அவரது தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், 31, பல்கலை நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்றிய போது, நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் சார்லி கிர்க். இவர், தன் 18 வயதில், டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ., என்ற பழமைவாத இளைஞர் அமைப்பினை துவக்கினார்.
கிர்க், குறிப்பாக இளைஞர்களிடையே பழமைவாதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக கல்லுாரி வளாகங்களில் பேச்சு மற்றும் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சிக்காக வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். இதையடுத்து, அவருக்கு மிகவும் நெருக்கமானார்.
இந்நிலையில், அமெரிக்காவின் யூடா மாகாணம், ஓரெம் நகரில் உள்ள யூடா வேலி பல்கலைக்கு நேற்று முன்தினம் சார்லி கிர்க் சென்றிருந்தார். அங்கு கல்லுாரி மாணவர்களிடையே குடியரசு கட்சிக்கு ஆதரவு திரட்டும் 'அமெரிக்கன் கம்பேக் டூர்' பிரசார இயக்கத்தை நடத்தினார்.
அவரது பேச்சை கேட்க நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு இருந்தனர். அப்போது அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி வன்முறை கலாசாரம் குறித்து பார்வையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், அவர் திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில், கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே சார்லி கிர்க் உயிரிழந்தார். அப்போது, சற்று தொலைவில் உள்ள ஒரு கட்டடத்தின் மேற்கூரை மீது நின்றிருந்த நபர் ஒருவர் ஓடுவது அங்கு எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகி உள்ளது.
அவர் தான் கொலையாளியா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலை உடனடியாக மூடப்பட்டு, மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த படுகொலைக்கு அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சி இரண்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.